Wednesday 11 January 2017

விவேகானந்தர் என்ற விதை ! - அ.பரிவழகன் - Swami Vivekananda by Parivazhagan


Why we Celebrate Vivekananda ? Swami Vivekananda Story Tamil - Parivazhagan-Tamil Motivational Video
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பெருமை உண்டு நம் நாட்டிற்கு என்ன பெருமை என்று நமக்கே உணர்த்திய பெருமை விவேகானந்தரையே சாரும். விவேகானந்தருக்கு முன் வாழ்ந்த பல துறவிகள் தங்களை முழுவதும் ஆன்மீகப்  பாதையில் மட்டுமே ஈடுபடுத்திக் கொண்டனர், ஆனால் விவேகானந்தர் ஆன்மீகத்தை ஒரு கண்ணாகவும், சமூகத்தை மற்றொரு கண்ணாகவும் பாவித்தார்.   

நம்முடைய பாரதம் முன்னேற வேண்டுமெனில் அதன் சமூக அமைப்பில் இருக்கும் "பெண்ணடிமைத் தனம்" ஒழிய வேண்டும் என்று முழுவதுமாக நம்பினார், அதற்காக தொடர்ந்து பாடுபட்டார். ஓர் சமூகப் போராளியாக நம் நாட்டில் நடக்கும் இன்னல்களை எதிர்த்து தன் இறுதிமூச்சு உள்ளவரை போராடினார். வேதங்களை அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிமையாக்கியது முதல் "விதவையின் கண்ணீரைத் துடைக்காத ஒரு மதத்தை நான் மதமாகவே மதிக்கமாட்டேன்" என்று சிம்மக்குரல் முழங்கியது வரை அவரின் பயணம் நமக்கு ஒரு பாடம்.

நம்முடைய தமிழகத்திற்கும் விவேகானந்தருக்கும் மிக நெருக்கமான ஒரு பந்தமுண்டு, விவேகானந்தர் அமெரிக்க சென்று சொற்பொழிவாற்ற வேண்டும் என்று சொன்னவர் நம் ராமநாதபுரம் சேதுபதி மன்னர், அவருக்கு வேண்டிய பொருளுதவியைச் செய்தவர் சென்னை திருவல்லிகேணியைச் சேர்ந்த அளசிங்கர், விவேகானந்தர் அமெரிக்கவிலிருந்து கப்பலில் வந்து முதலில் கால் வைத்தது நம் பாரதத்தின் தமிழ் மண்ணில் தான், பின் சென்னையில் அவர் ஒன்பது நாட்கள் தங்கியிருந்து பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றினார்.

ஆங்கிலேயர் காலத்தில் நம் நாட்டைப் பற்றி பல தவறான கருத்துருவாக்கங்கள் மற்ற நாடுகளில் பரப்பப்பட்டன, இந்த சூழலில் தான் விவேகானந்தர் அமெரிக்காவிற்கு சர்வ மத மாநாட்டிற்குச் சொற்பொழிவாற்றச் சென்றார். அங்கு  இந்து மதம் பற்றி உரை நிகழ்த்தினார், அதன் சாரம் உலக மதங்களை, மனிதர்களை அன்போடு அரவணைக்கும் தன்மையையே இந்துமதம் கொண்டுள்ளது , "உலக மதங்களுக்கெல்லாம் தாயாகிய புராதனமான இந்து மாதத்தில் இருந்து பேசுகிறான்" என்றார். விவேகானந்தர் அமெரிக்க, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நம் நாட்டின் புராதனமான ஆன்மிகம் , யோகா பற்றி சொற்பொழிவுகள் நிகழ்த்த அதைக் கேட்ட பலர் நம் நாட்டின் மீது கொண்ட தவறான எண்ணங்களை கைவிட்டனர், ஓர் உன்னத குருவாக பலர் விவேகானந்தரை மதிக்கத் தொடங்கினர். 

இன்றும் உலகம் முழுக்க இருக்கும் இளைய சமுதாயத்திடம் ஒரு மிக பெரிய உந்து சக்தியாக  விளங்கும் சுவாமி விவேகானந்தர் நம் நாட்டின் பொக்கிஷம். தான் வாழ்த்த காலத்தில் வறுமை, தீண்டாமை, ஆங்கிலேயரால் ஏற்பட்ட கொடுமைகள் என அனைத்திற்கும்  எதிராக வலிமையான ஓர் அறிவாயுதம் ஏந்திய மகான், இந்து மதத்தின் ஞான பொக்கிஷங்கள் எல்லோருக்குமானவை என்று முழங்கிய ஆன்மிகப்பேரொளி , உலக மதங்களை நம் பாரதம் நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த யுக நாயகன் , நம் கலாச்சார வலிமையை முதலில் நமக்கும் பின் உலகுக்கும் உணர்த்திய வெற்றி வீரன் ,சமூக அவலங்களுக்குச் சாட்டையடி கொடுத்த உண்மையான சீர்திருத்தவாதி , வீரத்துறவி விவேகானந்தர் !

நம்மில் இன்றும் விதைக்கப்பட்டிரும் விதை ! .


விவேகானந்தர் பிறந்தநாள் - இந்திய தேசிய இளைஞர் தினம்
Swami Vivekananda Birthday - National Youth Day - January 12      

3 comments:

  1. ஆனந்த் வெங்கட் கூறியுள்ளது போல அருமை. மதம் என்பது மாதம் என்றும் அதை என்பதை அத என்றும் இருக்கிறது. மாற்றவும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா...மாற்றிவிடுகிறேன்

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete