Saturday, 9 September 2017

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரை நிகழ்த்திய 125 ஆம் ஆண்டு - Swami Vivekananada America - Chicago Talk 125 th Anniversary

நாளை (11.09.2017) சுவாமி விவேகானந்தர் அமெரிக்க சிகாகோவில் நம் பாரதம் பற்றியும் இந்துமதம் பற்றியும் உரை நிகழ்த்திய 125 ஆம் (1893 - 2017) ஆண்டு பெரு நிகழ்வு ! 
Swami Vivekananada America - Chicago Talk 125 th Anniversary (11.09.1893)

இந்நேரத்தில் நாம் இரண்டு தமிழர்களை நினைவில் கொள்ள வேண்டும் ...
தனக்கு வந்த அழைப்பை சுவாமி விவேகானந்தரிடம் கொடுத்து தனக்கு பதில் அமெரிக்காவில் நடக்கும் சர்வ சமய மாநாட்டில் பங்குகொள்ள வேண்டும் என்றும், அதற்கு பொருளுதவியும் செய்த ராமநாதபுரம் மன்னர் திரு.பாஸ்கர சேதுபதி !

சுவாமி விவேகானந்தர் அமெரிக்க செல்ல பலரிடம் பொருளுதவி பெற்றுத்தந்த திரு.அளசிங்கர் ! , அளசிங்கர் விவேகானந்தருக்கு பல்வேறு உதவிகளை மிகுந்த அன்போடு செய்தவர். விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்து அளசிங்கருக்கு எழுதிய கடிதம் இன்றும் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் கல்வெட்டாக காட்சிக்கு உள்ளது !
அ.பரிவழகன்

#SwamiVivekananadaChicagoTalk125thAnniversary


Sunday, 30 April 2017

Sri Sankara - Sri Ramanuja Jayanthi !

இன்று ஸ்ரீ சங்கர - ஸ்ரீ ராமானுஜ ஜெயந்தி !

நம் ஹிந்து சனாதன தர்மத்தின் இரு கண்கள் இவர்கள், சங்கரர் பிரிந்து கிடந்த ஹிந்து சமூகத்தை ஒன்று படுத்தியும், ராமானுஜர் நம் சமூகத்தின்
ஏற்றத்தாழ்வுகளை நீக்க போராடியும், நம்
நாட்டிற்கு அரும் பெரும் பங்காற்றியுள்ளனர், அவர்களுக்கு நம் இதயப் பூர்வமான நன்றிகள்
வணக்கங்கள்.

Monday, 13 March 2017

பெண் என்ற பெருமை ! - அ.பரிவழகன் – Proud to be Women – Parivazhagan

நம் பாரத மரபில் பெண்மை என்பது ஒரு சக்தி சொரூபமாக போற்றப்படும் தன்மை கொண்டது. இதைப்  பலநேரம் நாம் உணராததும், மதிக்காததும் பல அவலங்களை, கொடுமைகளை பெண் சமூகத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டின் ஜீவாத்மா பெண்தன்மை கொண்டது, பாரத அன்னைப்  பலநேரம் தன் கண்களில் உத்திரம் வடியுமளவிற்குப் பெண்ணிற்கு ஏற்படும் சமூக,பொருளாதார,பாலியல் கொடுமைகள் இன்றும் ஏராளம்.


மனிதகுலம் பல நிலைகளில் வளர்ந்து விட்டது, வானையே வளைக்கும் அளவிற்கு மெருகேறிவிட்டது, என்றெல்லாம் வர்ணித்தாலும் பெண் என்றுமே இரண்டாம் நிலை தான், என்ற மனோபம் இன்றும் வேரூன்றியுள்ளது. சம உரிமை என்பதைத்தாண்டி சமூகக் கடமை என்ற  நிலையில் வந்து நிற்கிறோம். சமூகக் கடமை என்பது பெண்ணின் கல்வியில் தொடங்கி திருமணத்தில் பரிணமித்து சுய கௌரவம்’ என்பதில் முடிய வேண்டும்.

ஒரு காலத்தில் கள்ளிப்பாலுக்குக் காவு கொடுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் வாழ்க்கை இன்று நாகரிக உலகம் என்று கூறப்படும் நம் காலத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கும், ஆசிட் வீச்சிற்கும் , காதல் மிரட்டல்களுக்கும் பலியாவது காலத்தின் கொடுமையா ? நம் வளர்ச்சியின் விஷமமா ?      
  
தீபம் என்பது இருளை விரட்ட மட்டுமல்ல, பல தீபங்களில் ஒளி ஏற்றவும் தான். பெண் என்பவள் கற்கும் கல்வி , ஒழுக்கம் , தைரியம் , தன்னம்பிக்கை , உழைப்பு ஒரு குடும்பத்தையே வழிநடத்தும், சிறந்த தலை முறையை உருவாக்கும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றும்ஒரு குடும்பத்தின் சக்தி ; ஒரு நாட்டின் சக்தியாக மாறும்.

உயிர்களின் பிறப்பில் ஓர் உயரிய தன்மையான உயிர்களின் தோற்றம் என்பது பெண்மையின் கருணையாலே நடக்கிறது, உயிர்களின் வாழ்க்கைத் தொடர்ச்சி என்பது பெண்மையின் மிகப்பெரிய இயற்கைப்பணி, இயற்கைக்  தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கும் வரம் ! பெண் இயற்கையின் மகள் ; ஆணின் நிழல் ஆகவே பெண் என்பவள் பிறகும் பொழுதே பெருமைப் பார்க்கப்படுகிறாள் !

பெண் என்ற ஒற்றைக் காரணத்தால் எத்தனை எத்தனை இன்னல்கள் ; உதாசீனங்கள் ; கேலிகள் ; மனித மிருகங்களின் கோரப் பார்வைகள் ; பாலியல் துன்பங்கள் ; வாய்ப்பிழப்புகள் ; எனப் பட்டியல் நீளும் இத்தனையும் கடந்து நிற்கும் ஒரு போராட்ட வாழ்வே, ஒரு சாதனைதான்.

பெண்மையைப் போற்றுவது நம் கடமை,
அதுவே நம் பெருமை !
இனி எப்பொழுதும் ‘சரி நிகர்ச் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே !

Monday, 27 February 2017

ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் ! - அ.பரிவழகன்

இன்றோடு சரியாக ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன நான் தமிழ் இலக்கியம் , சமூகம் , கலாச்சரம் சார்ந்து பேச, எழுத, செயல்படத் தொடங்கி, நான் கடந்து வரும் ஒவ்வொரு ஆண்டும் எனக்குப் பல நல்ல கற்பிதங்களையும், படிப்பினைகளையும் தினம்தோறும் வழங்கி வருகின்றன. சிலநேரம் வெற்றிகள் சிலநேரம் தோல்விகள் என என்னுடையப் பயணம் தொடர்கிறது, இறைவனின் அருளோடும் உங்களின் அன்போடும் !
-அ.பரிவழகன் 
27/02/2017



Monday, 23 January 2017

மாணவர் புரட்சியும் , திராவிட அரசியலும் – அ.பரிவழகன் - Chennai Marina Students Protest and Dravidian Politics

மிகவும் குறைவான ஆட்களைக் கொண்டு, மிகவும் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட ஜல்லிக்கட்டிற்கான மாணவர், இளைஞர் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது ஒரு வரலாற்றுச் சாதனை. லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் சென்னை மெரீனாக் கடற்கரையில் குழுமியது, தமிழகம் முழுவதும் மாணவர்கள் எழுச்சி கொண்டது, தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ் மொழி பேசும் மக்கள் ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு ஆதரவு கரம் நீட்டியது, என வளர்ந்தது போராட்டம். நடுங்கியது தமிழக அரசு மட்டுமல்ல, டில்லியும் தான் ! இப்படி புகழ் மிக்கப் பக்கங்களைக் கொண்டிருந்தாலும், அதன் அரசியல் சாயம் என்றோ வெளுத்துவிட்டது. தன்நெழுச்சியான மாணவர் போராட்டம், அமைதி வழிப் போராட்டம் என்று தொடங்கினாலும் அதனை வளர்த்துக் காத்தது இயக்கங்கள் சார்த்த அரசியல் தத்துவங்களே.

திராவிட சிந்தனை, பெரியாரிய சிந்தனை, கம்யூனிஸ சிந்தனை கொண்ட இயக்கங்கள், தேசிய நீரோட்டத்தை எதிர்க்கும் அமைப்புகள், தமிழ் தேசியம் பேசித் தனித் தமிழ்நாடு கோரும் அமைப்புகள், தேசப்பிரிவினையை ஆதரிக்கும் அமைப்புகள், பகுத்தறிவு-முற்போக்குச் சிந்தனை என்று கூறிக்கொள்ளும் அமைப்புகள், ஆகியோரின் சித்தாந்தப் பிரச்சாரக் கூடமாக, செலவில்லா மாநாட்டுத் திடலாக , சொர்க்கபுரியாக, ஆட்டம், பாட்டம், கேளிக்கைகள், மீடியாக்களின் ஆதரவு, என நேர்த்தியாக, கவனமாக வடிவமைக்கப் பட்டிருந்தது, மெரீனாக்  கடற்கரைப் போராட்டம். தொடங்கப்பட்டது என்னவோ ஜல்லிக்கட்டிற்காக, ஆனால் அதன் வளர்ப்பு, செழிப்பு எல்லாம் இந்திய எதிர்ப்பு ! தனித் தமிழ்நாடு ! மோடி - பன்னீர்செல்வம் ஒழிக !

ஆறு நாட்களில் (17-01-2017 முதல் 22-01-2017 வரை) முதல் இரண்டு நாட்களைத் தவிர மீதம் இருந்த அனைத்து நாட்களும் தீவிரமான மோடி – பன்னீர்செல்வம் எதிர்ப்புதான். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஒ. பன்னீர்செல்வம், அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா ஆகிய மூவரையும் மிகவும் அநாகரிகமான முறையில், ஆபாசமாக, தவறுதலாகச் சித்தரித்து விமர்சனம் செய்வதுதான் பிரதானமாக இருந்தது. இந்தியா  வேண்டாம் ! தனித் தமிழ்நாடு வேண்டும் ! இந்திய தேசிய கொடி அவமதிப்பு என நீண்டது போரட்டத்தின் விஷக் கரங்கள். உண்மையாகவே ஜல்லிக்கட்டிற்காக போராட வந்த மாணவர் கூட்டம் செய்வதறியாது திணறியது.

அப்பாவியாக “தமிழன்” என்ற ஒரு அடையாளத்தை மட்டும் சுமந்துகொண்டு  ஜல்லிக்கட்டு வேண்டும் என்று கூடிய மாணவ-மாணவியர்களை, நாட்டிற்கு எதிராக, மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக திருப்பியதுதான் “முற்போக்கு” இயக்கங்கள் என்று சொல்பவர்கள் செய்த வேலை. உணர்சயின் விளிம்பில் இருக்கும் மாணவனை–மாணவியை மேலும் தூண்டி விட்டு கைகளில் இந்திய எதிர்ப்பு வாசகங்களைக் கொடுத்து மோடியையும், பன்னீர்செல்வத்தையும் திட்ட வைத்தது, அப்பாவி இளைஞனுக்கு உணவு வழங்கி, மேடை போட்டுக் கொடுத்து, அவனின் உணர்ச்சியை தூண்டிவிட்டு, மூளைச்சலவை செய்து, தாய் நாட்டிற்கு எதிராக திருப்பி விட்டதுதான்,  பகுத்தறிவு - கம்யூனிஸ கூட்டதின் சீரிய செயல்பாடு.     
  .          
சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற உண்மை நோக்கத்திற்காக கூடிய கூட்டத்திற்கு நாம் என்றும் தலை வணங்குகிறோம், நன்றியுணர்வோடு மதிக்கிறோம், அவர்களின் பலன் கருதாத அர்ப்பணிப்பு, போராட்ட உணர்வு, நிலையான புரட்சி ஆகியவைதான் ஜல்லிக்கட்டிற்கான தடையை நிரந்தரமாக நீக்கியது. மாணவர்களின், இளைஞர்களின் உண்மையான போராட்ட உணர்வை தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளத் துடித்த இயக்கங்களின் மாயவலைகள் ஏராளம். மோடி எதிர்ப்பு என்ற பெயரில் நாட்டை இகழ்வதும், நாட்டைத் துண்டாட நினைப்பதும் முட்டாள்தனம்.

மாணவர் போரட்டத்தின் நோக்கங்கள் சரி என்றாலும் அதன் வழிமுறை, அது பயணித்த விதம் தவறு. நாம் ஜல்லிக்கட்டிற்கு, மாணவர் எழுச்சிக்கு என்றுமே ஆதரவு என்றாலும், தவறான போராட்ட வழிமுறைக்குத் துணை போகக்கூடாது, தவறான போரட்டங்கள் நாட்டின் பாதுகாப்பையே சிதைத்து விடும்.

வாழிய செந்தமிழ் ;
வாழ்க நற்றமிழர் ;

வாழிய பாரத மணித் திருநாடு !          

Sunday, 22 January 2017

தடம் மாறும் மாணவர் போராட்டம் ! - அ.பரிவழகன்

ஜல்லிக்கட்டு என்றால் என்ன?

ஜல்லிக்கட்டு என்பது புராதனமான நம்முடைய பாரதப் பண்பாட்டில் இருக்கும் வீர விளையாட்டு, நம் நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் மாடுகளுடன் விளையாடும் விளையாட்டுகள் இருக்கின்றன. நம் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள் சமயத்தில் கிராமத்துக் கோவில்களில், காளைகளுக்கு கிராமத்து தெய்வங்களின் முன் பூஜை செய்து வழிபட்டு அவற்றை ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுப்புவர். ஒவ்வொரு ஊருக்கும் பொதுவாக ஊர் காளைகள், கோவில் காளைகள் என வளர்க்கப்படும். கோவில் காளைகள் , ஊர்காளைகள், தனிநபர் வளர்க்கும் காளைகள் என பலவும் வாடிவாசல் வழியாக துல்லிக்குதிக்கும். இவற்றை மாடுபிடி வீரர்கள் அடக்குவார்கள். நல்ல ஆரோக்கியமான உடல் வலிமையுள்ள மாடுகளை மட்டுமே போட்டிக்கு அனுப்புவர். மாடுபிடி வீரர்களும் நல்ல உடல்நலத்துடன் இருக்கவேண்டும். காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆகியோரின் உடல் சரியான முறையில் இருக்கிறதா என்று மருத்துவ சோதனையும் நடைபெறும்.

தடம் மாறும் மாணவர் போராட்டம் !

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் போராட்டம் மாணவர்களால் தொடங்கப்பட்டது என்றாலும் அதன் போக்கு நமக்கு சந்தேகங்களை அளிக்கின்றது, உண்மையிலையே இது பெரும் போராட்டம் தான் அனாலும் போராட்டம் என்ற பெயரில் பாரத பிரதமர், தமிழக முதல்வர் ஆகியோரை தரம் தாழ்த்தி, மிகவும் அநாகரிகமாக, ஆபாசமாக  விமர்சனம் செய்வது, தனித்தமிழ்நாடு கோருவது  வருத்தமளிக்கிறது. மாணவர் போரட்டத்தின் நோக்கம் சரி என்றாலும் அதன் வழிமுறை தவறு. நாம் ஜல்லிக்கட்டிற்கு, மாணவர் எழுச்சிக்கு ஆதரவு என்றாலும் தவறான போராட்ட வழிமுறைக்கு துணை போகக்கூடாது.