Saturday, 11 April 2015

இந்து ஆலயங்களும் - அரசுகளும் (Hindu Temples and Governments)



செய்தி :  இந்து கோவில்களில் உள்ள தங்கத்தை வங்கிகள் மூலம் பெற்று, அதற்கு ஈடாக வட்டி அளிக்கும் புதிய திட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. தங்கம் இறக்குமதி செய்வதன் மூலம் செலவாகும் அன்னிய செலாவணியை வெகுவாகக் குறைக்கவும், கடத்தல் தங்கத்தை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

நம் சந்தேகங்கள் :

ஏற்கனவே கோவில் நிலங்களை அரசு முறையாக பராமரிப்பதில்லை, கோவிலையும் சுத்தமாக வைதிருப்பதில்லை, கோவிலுக்குத் தேவையான வசதிகளையும், பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளையும் முறையாகச் செய்து தருவதில்லை, இந்நிலையில் கோவில் தங்கத்தின் மீது இப்பொழுது அரசுக்கு இருக்கும் பார்வை சரியாக இருக்குமா,இயங்குமா ?   

பெரிய கோவில்கள் மட்டுமே சிறப்பாகப் பராமரிக்கப் படுகின்றன, சிறிய கோவில்கள் முதலில் பாதுகாப்பாகவே இல்லை, பராமரிப்பு பற்றி பிறகு பார்க்கலாம்.  

பா.ஜ.க அரசு கோவில்களின் நகைகளை எடுத்து, உருக்கி, வட்டி கொடுத்து,  சிறப்பாக பராமரிக்கின்றது என்று  வைத்துகொள்வோம், நாளை வேறு அரசியல் கொள்கையை கொண்ட அரசு ஆட்சிக்கு வந்தால் நகைகளை அவர்கள் "ஒழுக்கமாக" பாதுகாப்பார்கள், என்று உறுதி கூற முடியுமா  திராவிட கட்சிகளின் ஆட்சியில் நம் தமிழக கோவில்களின் நிலை என்ன ? கோவில் வருமானத்திலே இத்தனை ஊழல் "தங்கமே" கிடைத்து விட்டால் பிறகு என்ன "கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா" என்ற நிலை தான். 

மோடியரசு நகைகளை எடுத்துக் கொள்ளலாம் தவறில்லை ஆனால் நகைகளுக்கு யார் உத்தரவாதம் தருவது ? பா.ஜ.க - மோடியரசு கோவில் விசயத்தில் ஒழுக்கமாக செயல் படலாம், மற்ற மாநில அரசுகள், பா.ஜ.க வுக்குப் பிறகு வரும் அரசுகள் கோவில் விசயத்தில் ஒழுங்காகச் செயல் படுமா ?  

பக்தர்கள் கொடுக்கும் தங்கம் ஆட்சி நடத்த என்றால், அதை மற்ற மதங்களின் வழிபாட்டு தலங்களில் இருந்தும் பெற வேண்டும். முடியுமா உங்களால் ? அதுதானே மதச்சார்பின்மை ! 

ஒரு அரசும் இந்து கோவில்களின் பணத்தை எடுத்து இந்து மதத்தைப் பாதுகாக்க, இந்து தர்மத்தை போதிக்க எந்த முயற்சியும் செய்வதில்லை, மாறாக கோவிலில் இருந்து பணத்தை கொடு, நிலத்தை கொடு , தங்கத்தை கொடு என்று கேட்கின்றனர். 

எத்தனை இந்து கோவில்களின் இணையதளங்கள் செயல் பாட்டில் உள்ளன ?  எத்தனை மாநில அரசுகள் தங்கள் மாநில கோவில்களில் நடக்கும் நிகழ்சிகளை இணையத்தில் பதிவு செய்கின்றன ? 

கோவில்களில் முறையான கழிப்பிட வசதி இல்லை, குளத்தில் குளித்து விட்டு உடைமாற்ற பாதுகாப்பு அறை வசதி இல்லை. இதை எல்லாம் யார் செய்து தருவது ?   

அரசர்கள் அந்தக் காலத்தில் கோவில்களுக்கு நகைகளைக் கொடுத்தனர், ஆனால் இன்று அரசோ நகைகளை கேட்கிறது ! 

பாண்டியனும், சோழனும்,சேரனும் கட்டிய தமிழகக் கோவில்களின் இன்றைய நிலை என்ன ? இன்று அறநிலையத் துரையின் கீழ் இயங்கும் கோவில்களில் இருந்து பெறப்படும் பணம் கோவில்களுக்கு முழுமையாகச் செலவு செய்யப்படுகிறதா ? 

ஊழல் அரசியல் வாதிகளையும், ஊழல் அதிகாரிகளையும் நம்பி எப்படி கோவில் நகைகளை வங்கிகளில் வைப்பது ? சுடுகாட்டு கூரையில் ஊழல்; கார்கிலில் உயரிழந்தவர்களுக்கு கட்டிய வீடுகளில் ஊழல் என்று மக்களின் உணர்வு சம்மந்தப்பட்ட விசயங்களிலே ஊழல் செய்து ருசிகண்ட நம் மக்கள் தலைவர்கள் கோவில் நகைகளை சும்மா விடுவார்களா ? "பாய்சனையே பாயசமாக சாப்பிடும் நம்மவர்களிடம் பாயசமே கிடைத்தால் ? "   

நாட்டின் வளர்சிக்காக கோவில் தங்கத்தை எடுக்கலாம், உருக்கலாம், விற்கலாம் தவறில்லை, நான் அந்த அளவுக்குப்  பிற்போக்குவாதி அல்ல, ஆனால் அதே சமயம், சுதந்திரத்திற்குப் பிறகு இத்தனை ஆண்டுகளில் அரசுகள்  கோவில்களுக்குச் செய்தவை என்ன ?  

கோவிலில் இருந்து பணம் வரவில்லை, கோவிலுக்கு சொந்தமாக நிலம் இல்லை என்றால் எந்த அரசாங்கமாவது கோவிலை நடத்துமா ? 

"கோவில்கள் பணம் கொழிக்கும் இடம், முதலீடு இல்லாத வருமானம் தரும் இடம் என்பதற்காகவே அரசுகள் கோவில்களை நடத்துகின்றன" பணத்திற்காகவே அன்றி பக்திக்காக அல்ல !    

இந்த திட்டத்தில் அரசு வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும், நாடாளுமன்றத்தில் எந்த எந்த கோவில்களில் இருந்து எவ்வளவு நகைகள் பெறப்பட்டன, எவ்வளவு வட்டி கொடுக்கப்படுகின்றன என்பன போன்ற விஷயங்கள் பதிவு செயப்பட வேண்டும். 100 சதவீத வெளிப்படைதன்மை தேவை இல்லையேல் ஆண்டவன் சொத்து அம்போ !  

அரசு எடுக்கப்போவது ஆண்டவன் தங்கம் அல்ல; மக்களின் தங்கம் ! 
கோவில்கள் மக்களின் சொத்து ! அரசுகளின் வட்டிக்கடை அல்ல !  
-பரிவழகன்-


1 comment: