மது என்பது இன்று மகத்துவம் தரும் பொருள் அரசுக்கு !, நகரம் முதல் கிராமம் வரை
மது இல்லாத விருந்துகளே கிடையாது என்ற நிலை, வாரி வழங்க அரசாங்கமே கடைதிறந்து
ஊற்றிக்கொடுக்கிறது (கெடுக்கிறது). இன்று சிறுவர்கள் கூட மது குடிக்கும் அவல நிலை.
எளிதில் கிடைக்கும் வகையில் இன்று தெருவிற்கு தெரு மதுபான கடைகள் முளைத்து விட்டன,
கெட்டுப்போனது இளைய தமிழகம்.
2010ல் இந்தியா டுடேவில் வந்த கருத்துக் கணிப்பின்படி
கல்லூரி விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவர்கள் மத்தியில் மது அருந்தும் பழக்கம் 10% அதிகரித்துள்ளது என்றும், 30% பேர் மது அருந்துகின்றனர் என்றும் கூறுகிறது. 2010 லேயே இந்த நிலை என்றால் இப்பொழுது ? நினைக்கவே
மனம் நடுங்குகிறது.
இன்று பெரு, சிறு நகரங்களில் இருப்போர், கிராமத்தில் இருப்போர் என அனைவரிடம்
விஷச் செடியாக இப்பழக்கம் ஊடுருவி விட்டது. சென்னையில் நடக்கும் எந்த ஒரு விருந்தும்
மது இல்லாமல் முடிவதில்லை, பெண்கள் மது பழக்கத்திற்கு அடிமையாவது நம் சமூகம் வெட்கப்
பட வேண்டிய விஷயம்.
மது அருந்துவது, புகை பிடிப்பது ஏதோ ஓர் உயர் கவுரவம் என்பன போன்ற போலியான ஒரு
பிம்பம் உருவாக்கப்படுகிறது. மது என்பது மதியை மயக்கி உடலைக் கெடுக்கும் என்பது
மாறி போலியான சுகத்திற்கு அடிமையாவது ‘புதிய நாகரிகம்’ என அனைவரும் கைகளில் கோப்பையுடன்
வலம் வருவது நம் தமிழ்நாட்டின் சாபக்கேடு. மதுவால் ஏற்படும் உயிர் பலிகள், உடல்
நோய்கள், குடும்பப் பிரச்சனைகள், சாலை விபத்துகள் என அனைத்தும் நாட்டிற்கும்,
தனிமனிதனுக்கும் தீமையே.
மதுவால் மதிகெட்டுப் போனோ ரெல்லாம் அதன் தீமைகளை அறிவர் அறிந்தும் விடுபடாது
அதனால் சிறைவைக்கப் பட்டு அடிமைகளாக வாழும் கொடுமை நம் கண் முன் நடக்கிறது. நாடும் நாமும் வெட்கப்பட வேண்டிய கொடுமை இது !
ஊழல் : இன்று இந்த வார்த்தை தெரியாத மனிதர்களே கிடையாது நம் நாட்டில், புதிய
புதிய ஊழல்கள் நாள்தோறும் செய்திகளில் வலம் வருகின்றன; அமைச்சர்கள் முதல் அரசு
அதிகாரிகள் வரை பெரியதும் , சிறியதுமாக தங்களால் முடிந்தவரை தவறுகளைச் செய்கின்றனர்.
இதுவரை நம் நாட்டில் நம்மவர்கள் கொள்ளையடித்த பணத்தை ஒழுங்காகப்
பயன்படுத்தியிருந்தால் நம் நாட்டின் வறுமையையே ஒழித்திருக்கலாம் !
அரசாங்கம் அமைச்சர்களுக்கு பணம், வாகனம், அதிகாரம் முதலியன கொடுத்ததும் ஏன்
இந்த ஊழல் ? அவர்கள் ஏன் கொள்ளையடிக்க வேண்டும் ? அரசியல் என்பதே சதுரங்கம் போன்றது,
ஒரு முறை ஒரு காய் வெட்டப்பட்டால் அது உள்ளே வர, ஏதேனும் ஒரு சிப்பாய் கரையேறினால்
தான் உண்டு. அதே நிலைதான் நம் அரசியல் வாதிகளுக்கும், ஒரு முறை ஒரு தொகுதியில்
தோற்றுப் போனால் பின் அத்தொகுதியில் வெற்றிபெறுவது சாதாரண காரியமல்ல, ஏன் தன்
கட்சியிலே அத்தொகுதி வேறு வேட்பாளருக்குப் போய்விடும் சாத்தியமும் உண்டு. எனவே
இருக்கும் வரை நான்தான் ராஜா ! என்று முடிந்தவரை, முடியும்வரை கொள்ளையடிகின்றனர்,
மக்களை மறந்து உறவினர்களை விரும்புகின்றனர். தன் குடும்பம், உறவினர், தன் ஆதரவாளர்
என பணம் பாதை மாறுகிறது, பின்னே இவர்கள் தானே தேர்தல் நேரங்களில் உழைப்பவர்கள் !. அதிகாரத்தில்
இருக்கும் பொழுதே பணம், வீடு, தோட்டம் என வாங்கி குவித்து விட்டால் பின்
தோற்றாலும் கவலையில்லை வசதியான வாழ்க்கையே தொடரும்.
வீட்டில் இருக்கும் பணம் வீட்டை நடத்த ; வெளிநாடுகளில் இருக்கும் சொத்துகள்
பின் வரும் தேர்தல்களில் செலவு செய்ய, இன்று அதையும் தாண்டி பல அரசியல்
பிரமுகர்கள் பல கல்லூரிகளை நடத்துகின்றனர். பொறியியல், மருத்துவம், தொழிற்கல்வி என
எந்தத் துறையையும் விடாமல், துறை வாரியாகக் கல்லூரிகளை கட்டி வற்றாத செல்வமான
கல்வியை பணம் கொழிக்கும் மரமாக மாற்றி ‘கல்வித் தந்தைகளாக’ வலம் வருகின்றனர். பெரிய
ஊழல்கள் மட்டுமே நமக்குத் தெரிய நாளிதல்களிலும், தொலைகாட்சிகளிலும் அவை பிரபலப் படுத்தப்படும்.
ஆனால் சிறு சிறு ஊழல்கள் கொள்ளைகள் நம் நாடு முழுவதும் தினமும் மறைவாக சில
சுதந்திரமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இவை அனைத்தும் சிலரின் ‘சுகமான ஆடம்பர’ வாழ்க்கைக்காகத்தான், மக்களின் வாக்குகள்
விலை மதிப்பில்லாதவை அவை வீணாக்கப் படக் கூடாது, இனிவரும் காலங்களிலாவது அரசியல்
தலைவர்கள் கடமை மறவாது பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். ஊழல் நம் நாட்டை விட்டு
நீங்க வேண்டும்.
No comments:
Post a Comment