Monday, 16 November 2015

தலைமைப்பண்பு : தன்னம்பிக்கை தந்த பரிசு – அ.பரிவழகன் - Self Confidence & Leadership

நம்பிக்கை என்பது ஒன்றின் மீது முழுமையாகப் பற்றுக் கொள்வது, ஒன்றை மட்டுமே முழுமையாக நம்புவது. கடவுளின் மீது உள்ள உண்மையான பற்று கடவுள் நம்பிக்கையை உண்டாகும், நல்ல நம்பிக்கைகள், நல்ல சிந்தனைகளை உருவாக்கும் அது நல்ல செயல்களுக்கும், ஆக்கப்பூர்வமான முடிவுகளுக்கும் வழிவகுக்கும். உண்மையான பற்று உறுதியைத் தரும், அதுவே தீய எண்ணங்களை உடைத்தெறிய உதவும்.

தலைமை சரியாக இயங்குமேயானால் அதன் கீழ் உள்ள நிலைகளில் பணிகள் சரியாக நடைபெறும், தலைமை என்பது தனக்கு கீழ் இருப்பவர்களை வேலைவாங்கும் பணியல்ல, சரியான வேலையை சரியான நபருக்குக் கொடுத்து அவர்களுக்கு ஊக்கமளித்து தட்டிக்கொடுக்கும் பணி. “எதை எவர் செய்தால் இச்செயல் இனிதே வெற்றிபெறும்” என்பதை அறிந்து அவர்களுக்கு சரியான பணியை அளித்தால் வேண்டும்.

தன்னோடு பணியாற்றுபவர்களை இத்தலைமை சரியான பாதைக்கு, வெற்றியை நோக்கி, அழைத்துச் செல்ல வேண்டும். தலைமையின் செயல்களை அனைவரும் நம்பும் வகையில், அதன் உத்தரவுகளை அனைவரும் மதிக்கும் வகையில் ஒளிவு மறைவின்றி அதன் செயல்பாடுகள் மனநிறைவையும், நம்பிக்கையையும், வெளிப்படுத்த வேண்டும்.

ஒரு சரியான தலைமை அனைவரின் செயல்பாடுகளையும் திறம்பட கவனித்தல் வேண்டும், அதன் முடிவுகள் தெளிவாக அனைவருக்கும் ஏற்றதாக, ஒருதலை பட்சமாக இல்லாமல், இருத்தல் அவசியம். ஒரு நல்ல தலைமை தன் நிறுவனத்தின் வெற்றி, நலன் பற்றி சிந்திப்பதாக இருத்தல் வேண்டும், அனைத்து முக்கிய ஊழியர்களிடமும் ஆலோசனைகளைப் பெற்று முடிவுகளை எடுக்கும் பாங்கு தலைமையின் மீது நல்ல மதிப்பை ஏற்படுத்தும்.

“ஒரு நல்ல தலைமையால் சாதாரண மனிதர்களைக்கூடத் திறைமை சாலிகளாக மாற்ற முடியும்”   

தலைமையின் வெற்றியை நோக்கிய பயணத்தில் தோல்விகள் ஏற்படும் பொழுது அதைச் சீரமைத்து மீண்டும் முன்னேற ஆற்றல் மிகுந்த மனிதர்கள் தலைமைக்கு உறுதுணையாக இருத்தல் வேண்டும். ஒரு புத்திசாலியான தலைமை என்றும் ஆற்றல் மிக்க மனிதர்களை தன்னோடு இணைத்துக் கொள்ளும், தலைமைக்குத் தன் நிறுவனத்தின் அனைத்துத் துறைகளைப் பற்றிய ஞானம் அவசியம். அனைத்துத் துறைகளைப் பற்றிய அறிவு உள்ளவரால் மட்டுமே சிறந்த தலைவராக விளங்க முடியும்.

“நல்ல தலைவர்கள் சூழ்நிலையால் உருவாக்கப்படுகிறார்கள், வெற்றியோ தோல்வியோ அது தலைமையைப் பொறுத்தே அமையும்”

தலைமை என்பது தன்நிகரற்று விளங்க வேண்டுமாயின் அது தனித் தன்மையுடன் செயலாற்ற வேண்டும், ஒரு தலைமையின் செயல்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் விரைவாகவும், விவேகமாகவும் இருத்தல் வேண்டும் ஆனால் அதன் சிந்தனைகள் விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்ததாக இருத்தல் வேண்டும்.

ஒரு நல்ல தலைமை அனைவரின் உழைப்பிற்கும் தலைவணங்கி, ஊக்குவித்து, அனைவரோடும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். தலைமையின் கட்டமைப்பு கட்டுக்கோப்பானதாக சரிசமமான அதிகாரப் பகிர்வுடன் இருத்தல் வேண்டும்.

ஒரு சிறப்பான தலைமையால் மட்டுமே நல்ல நிர்வாகத்தைக் கொடுக்க முடியும் அது வீடாக இருந்தாலும் சரி நாடாக இருந்தாலும் சரி. தலைமையே தாரக மந்திரம் ! 
துன்பம் வரும்போதும் துவண்டுவிடாத நம்பிக்கை
இன்னல் வரும்போதும் இடிந்துவிடாத நம்பிக்கை
துயர் வரும்போதும் துணிச்சலான நம்பிக்கை நமக்கு வேண்டும்

No comments:

Post a Comment