Saturday, 14 November 2015

நம் நாடு : தள்ளாடும் தலைமுறை – அ.பரிவழகன்


இன்றைய இளைய சமுதாயம் ஓர் புதிய பாதையில் சென்று கொண்டிருக்கிறது அது ஒன்றும் புதிய முயற்சியோ, சாதனையோ அல்ல, நம்மை நாமே அழிக்கும் செயல், இன்று நம் நாட்டில் நடக்கும் பெரும்பாலான பார்டிகளில், விருந்துகளில் மதுபானங்களின் புழக்கம் அதிகமாகிவிட்டது, மக்கள் அவற்றை சாதாரணமாகப் பயன்படுத்தும் அவல நிலை, எங்கே செல்கிறோம் நாம் ?. குளிர்பானங்களைப் போல குவிகின்றன மதுபானங்கள், ஆங்கிலேய ஆட்சியில் கள்ளுக்கடை மறியல்கள் நடந்த நாட்டில் இன்று மதுக்கடைகளுக்கு மாலை மரியாதை பாதுகாப்பு என பல அங்கீகாரங்கள்.

இன்றைய தலைமுறை மாணவர்கள் மிகவும் திறமைசாலிகள், ஆனால் அவர்களின் வாழ்க்கை “தீயின் நடுவே பஞ்சு” போல பரிதாபமாக உள்ளது. நல்லதைச் சொல்ல வேண்டிய சமுதாயம் கெட்டதை மட்டுமே அதிகம் சொல்கிறது, இன்று நம் மாணவர்கள் மீடியாவின் வாசத்தில் வளர்கின்றனர், வீடியோ கேமையே விதியென நம்பி நேரத்தை வீணடிக்கின்றனர். மாணவர்களின் மூளை குறுக்கு வழியில்  பணம், எளிதில் புகழ், பிடிவாதம், மது எனக் குழம்பிபோய் இருக்க யார் காரணம் ?

எளிதில் பணம் சம்பாதிக்க வழிகள் ஆயிரம் என்று சொல்பவர்கள் உழைத்துச் சம்பாதிக்கச் சொல்லாமல் தவறு செய்யாவே தூண்டுகின்றனர், அடுத்தவரின் “உணவைப் பறிக்கவே” நம் இன்று முயல்கிறோமா ? என்ற எண்ணமும் எழுகிறது. நம் கல்வி முறையிலோ சுயநலம் தலைவிரித்து ஆடுகிறது, அடுத்தவனுக்கு இடமளிக்கதே ! என்பதே தாரக மந்திரம். கல்வியில் போட்டி இருக்கலாம்; கல்வி போர்களமாக இருக்ககூடாது. தன்னம்பிக்கை, பொதுநலம், அன்பு இவற்றை வளர்க்காமல் பணம் என்ற குதிரையின் மீது கல்வி சவாரி செய்ய யார் காரணம் ?

இன்று நம் நாட்டில் விவாகரத்துகள் அதிகமாகிவிட்டன காரணம் சகிப்பின்மை, ஈகோ, பணம். “நீ யார் ? என்னை கேள்வி கேட்க !” நானும் உன்னைப் போலவே அதிகமாகப் பணம் சம்பாதிக்கிறேன் என ஆண்-பெண் இருபாலரும் போடும் வீண் சண்டைகள் முடிவது வழக்குமன்றத்தில். பணம் நம் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த மட்டுமேயன்றி நம் அடிப்படை வாழ்க்கையையே சீரழிக்க அல்ல.

“டிஸ்கோவில்” தொடங்கி “லிவிங் டு கெதரில்” தொடர்ந்து முடிவது “டிவோர்சில்” பிடித்தவரை வாழ்வோம் இல்லை என்றால் “குட்பை” இதுவே இன்றைய நவீன கலாச்சாரம். சாதாரண பிரச்சனைகளுக்கும் , சிறிய சண்டைகளுக்கும் கூட தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை இன்று அதிகம் இப்படி தன்னம்பிக்கை இல்லாத சமூகத்தைத்தான் இன்று நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா ?.

இவற்றைத் தீர்க்க என்ன வழி ? ஒரே வழி பண்பான கல்வி !

நல்ல பண்பை வளர்க்கும் நீதி போதனைகள் பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும், நம் கல்வி அன்பையும், பண்பையும் வளர்க்கும் விதமாகவும், சமுதாய நலன்களில் அக்கறை கொண்டதாகவும் இருக்க வேண்டும். கல்வியை மாற்றாமல் சமூக மாற்றம் சாத்தியமில்லை. எனவே இனிவரும் காலங்களின் நம் தவறுகளை சரி செய்து சமூக முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் உயர்ந்த மனிதர்களாக இருக்க வேண்டியது நம் ஓவ்வொருவரின் கடமை. இதுவே நம் நாட்டிற்கு நாம் செய்யும் சிறப்பான சேவை. 

No comments:

Post a Comment