Saturday, 28 November 2015

“விருதைத் திருப்பித்தருவேன், நாட்டை விட்டு வெளியேறுவேன்” சகிப்புத்தன்மை ஒரு சாதாரண இந்தியனின் பார்வை – அ.பரிவழகன் - Intolerance in India - Parivazhagan


அரசாங்கத்தை எதிர்பதற்கு எல்லோருக்கும் ஒரு கரணம் இருக்கிறது, உரிமையும் இருக்கிறது, எதிர்க்கும் விதத்தில் எதிர்க்கும் நோக்கத்தில் ஒவ்வொருவரும் மாறு படுகிறார்கள். இன்று பலர் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்கவேண்டும் என்ற நோக்கில் நம் நாட்டை அவமதிப்பது வருத்தமளிக்கும் செயல். விருதுகளை திருப்பி அளிப்பது, நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கூறுவது, நாட்டின் அமைதியை கெடுக்கும் ஒரு வழிமுறை. நம் நாட்டில் வழங்கப்படும் எந்த ஒரு உயரிய தேசிய, மாநில விருதும் ஒட்டு மொத்த நாட்டு மக்களின் சார்பாக, அரசின் மூலமாக வழங்கப்படுகிறது, இங்கு அரசு என்பது விருதுவழங்கும் இடத்தில்  இருந்தாலும் விருது “மாக்களின் சார்பாக” வழங்கப்படுகிறது, எந்த ஒரு கட்சியின் சார்பாகவும் வழங்கப்படுவதில்லை, அப்படியிருக்க ஒரு காட்சியின் மீது இருக்கும் கோபத்தை வெளிப்படுத்த அரசின் விருதைத் திருப்பித்தருவது என்பது நாட்டு மக்களை அவமதிப்பதாகும். சகிப்புத்தன்மை பற்றி பேசும் அறிவுலக மேதைகள் ; நடிகர்கள் ; அரசியல்வாதிகள் நாட்டில் இதற்கு முன் நடந்த வன்முறைகள்; மோதல்களின் போதெல்லாம் வாய் மூடி இருந்தது ஏன்?  

நரேந்திர மோடியுடைய ஆட்சி வரும் முன் நாட்டில் நடத்த வன்முறைகளுக்கு எதிராக போராடதவர்கள் இப்பொழுது போராடுவது அரசியல் நோக்கத்திற்காகவே. தங்களைச் சமூக சீர்திருத்தவாதி என்று காட்டிக் கொள்ளவும், முற்போக்குவாதி என்று முன்மொழியவும் செய்யப்படும் ஒரு உத்தியே தவிர இதில் தேச நலன் எங்கு இருக்கிறது ? காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவாளர்களே பெருவாரியாக விருதுகளைத் திருப்பிக் கொடுத்தனர் தங்களை “நடுநிலையாளர்கள்” என்று கூறிக்கொண்டு.

நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கூறுபவர்கள், இந்த நாட்டிற்குச் செய்தது என்ன ? மக்களைத் தங்களின் விஷக் கருத்துக்களால் பிரிக்க நினைத்த சிலரால் நாடு பட்ட துயரம் ஏராளம்.

போபால் விசவாயுவின் கொடூரத்திற்கு மரணம் அடைந்தவர்களுக்கு இதுவரை மத்திய அரசு முறையான இழப்பீடு வழங்கவில்லை, குற்றம் சாட்டப்பட்ட “ஆன்டர்சன்” அமெரிக்க தப்பி சென்றதற்கு உதவிய ராஜீவ் காந்தியை எதிர்த்து யாரும் விருத்தைத் திருப்பித்தரவில்லை.

இந்திரா கந்தியின் மரணத்திற்குப்பிறகு தலைநகர் டெல்லியில் நடந்த “சீக்கியர்களின்” படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாரும் விருத்தைத் திருப்பித்தரவில்லை.

நாட்டில் இதுவரையில் நடந்து கொண்டு இருக்கும் “பெண்களுக்கு” எதிரான வன்கொடுமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு பெண்ணிய வாதி எழுத்தாளர், கலைஞர் அல்லது ஒரு ஆண் எழுத்தாளர், கலைஞர்  என ஒருவர் கூடத் தன் விருத்தைத் திருப்பித்தரவில்லை.

அண்டை நாடான இலங்கையில் “தமிழர்களுக்கு” எதிராக நடந்த வன்கொடுமைகள், இனப்படுகொலைகள், மனித உரிமைமீறல்கள் என எந்த ஒரு கொடுமைகளுக்கும் நம் நாட்டில் எந்த ஒரு சமூக போராளி, முற்போக்கு வாதி என யாரும் ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை, தன் விருதையும் திருப்பித்தரவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் நடந்த கொடூரமான பல குண்டு வெடிப்புகள், மும்பை கலவரங்கள், தாக்குதல்கள் என எதையும் கண்டித்து ஒருவர் கூடத் தங்களின் விருத்தைத் திருப்பித்தரவில்லை.

கஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட, அடித்து விரட்டப்பட்ட “கஷ்மீர் பண்டிட்டுகள்” சொந்த நாட்டிலேயே இன்று வரை அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர் அவர்களுக்காக யாரும் தங்களின் விருத்தைத் திருப்பித்தரவில்லை.

எல்லாவற்றிக்கும் மேலாக, நாட்டையே சீரழிக்கும், அண்ணா ஹசாரே முதல் அனைவரும் எதிர்த்த, கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றதிர்கே வித்திட்ட, இதுவரை நாட்டில் நடந்த பல கோடிக் கணக்கான ருபாய் மதிப்புள்ள “ஊழல்களுக்கு” எதிர்ப்புத் தெரிவித்து யாரும் தங்களின் விருத்தைத் திருப்பித்தரவில்லை.

காங்கிரஸ் ஆட்சியல் ஹிந்துகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏன் யாரும் தங்களின் விருத்தைத் திருப்பித்தரவில்லை ?   

இவை சில மட்டுமே, இப்படி போராட வேண்டிய எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய சம்பவங்களுக்கு வாய் மூடி கள்ள மௌனம் காண்பித்து விட்டு இப்பொழுது நாட்டை விட்டு வெளியேறுவேன், விருதைத் திருப்பித் தருவேன் என்றால் இது யாரை ஏமாற்றும் வேலை. நயன்தார சேகல்களும் ஆமிர்கான்களும் மக்களை முட்டாள்கள் என நினைத்து விட்டார்களா ? இவர்களுக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரமும், பெருமையும், புகழும் இந்த நாட்டு மக்கள் கொடுத்தது. நாட்டிற்கு விசுவாசமாக இருப்பது இவர்களின் கடமை. விசுவாசம் இல்லை என்றாலும் பரவாயில்லை விஷமம் இருக்கக் கூடாது.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த எத்தனையோ இராணுவ வீரர்கள் அவர்களின் குடும்பம் இன்று நாட்டில் இருக்கும் இடம் தெரியாது, தந்தையை இழந்த குழந்தைகள், கணவனை இழந்த இளம் விதவைகளின் துயரங்கள் வெளியில் சொல்லமுடியாது. நாட்டிற்காக அனைத்தையும் இழந்து நிற்கும் இவர்களே நாட்டை இகழ்ந்ததில்லை மாறாக தொடர்ந்து நாட்டிற்காகவே போராட உறுதியாக உள்ளனர் , ஆனால் நாட்டின் ஆனைத்து வசதிகளையும் சுகங்களையும் அனுபவித்த உங்களுக்கு என்ன அப்படியொரு வன்மம் நம் தாய்த்திரு நாட்டின் மீது.  

நம் இந்திய தேசம் என்பது பல மொழிகள், பல மதங்கள், பல பழக்கவழக்கங்களை கொண்ட மக்கள் வாழும் நாடு, இப்படிபட்ட ஒரு நாட்டை உலகின் எந்த மூலையில் தேடினாலும் கிடைக்காது. நம்மில் பல வேறுபாடுகள் இருபினும் நாம் ஒற்றுமையுடனேயே வாழ்கிறோம், காரணம் இம்மண்ணின் இயல்பு, தன்மை. இம்மண்ணின் தன்மை, அனைவரையும் இணைக்கும் இயல்பு, என்பது நம் நாட்டிற்கு வெளியில் இருந்து வந்த மதங்களால் உருவாக்கப்படவில்லை, காலம் காலமாக நம் நாட்டில் உயர்புடன் வாழந்து கொண்டிருக்கும் "இந்து தர்மம்" எனும் ஜீவ நதியால் உருவாக்கப்பட்டது.

ஏற்கனவே நம் அண்டை நாடுகள், மற்ற மேற்கத்திய நாடுகள் இந்தியா எப்பொழுது துண்டாகும், நாம் எப்பொழுது ஆதிக்கம் செலுத்தலாம் என்று கழுகின் கண் போல நம்மை கவனித்துக் கொண்டிருக்க, நம் நாட்டில் இருக்கும் சில சக்திகளோ நாட்டைத் துண்டாடும் செயலுக்குத் துணை போவது வருத்தமளிக்கிறது.  

தயவு செய்து நாட்டைப் பிரிக்காதீர்கள்.  

Saturday, 21 November 2015

நாட்டைக் கெடுக்கும் இரு பெரும் திருடர்கள் : மது, ஊழல் – அ.பரிவழகன் - Two big thieves spoiling the nation : Alcohol and Corruption


மது என்பது இன்று மகத்துவம் தரும் பொருள் அரசுக்கு !, நகரம் முதல் கிராமம் வரை மது இல்லாத விருந்துகளே கிடையாது என்ற நிலை, வாரி வழங்க அரசாங்கமே கடைதிறந்து ஊற்றிக்கொடுக்கிறது (கெடுக்கிறது). இன்று சிறுவர்கள் கூட மது குடிக்கும் அவல நிலை. எளிதில் கிடைக்கும் வகையில் இன்று தெருவிற்கு தெரு மதுபான கடைகள் முளைத்து விட்டன, கெட்டுப்போனது இளைய தமிழகம்.

2010ல் இந்தியா டுடேவில் வந்த கருத்துக் கணிப்பின்படி கல்லூரி விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவர்கள் மத்தியில் மது அருந்தும் பழக்கம் 10% அதிகரித்துள்ளது என்றும், 30% பேர் மது அருந்துகின்றனர் என்றும் கூறுகிறது. 2010 லேயே இந்த நிலை என்றால் இப்பொழுது ? நினைக்கவே மனம் நடுங்குகிறது.

இன்று பெரு, சிறு நகரங்களில் இருப்போர், கிராமத்தில் இருப்போர் என அனைவரிடம் விஷச் செடியாக இப்பழக்கம் ஊடுருவி விட்டது. சென்னையில் நடக்கும் எந்த ஒரு விருந்தும் மது இல்லாமல் முடிவதில்லை, பெண்கள் மது பழக்கத்திற்கு அடிமையாவது நம் சமூகம் வெட்கப் பட வேண்டிய விஷயம்.  

மது அருந்துவது, புகை பிடிப்பது ஏதோ ஓர் உயர் கவுரவம் என்பன போன்ற போலியான ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது. மது என்பது மதியை மயக்கி உடலைக் கெடுக்கும் என்பது மாறி போலியான சுகத்திற்கு அடிமையாவது ‘புதிய நாகரிகம்’ என அனைவரும் கைகளில் கோப்பையுடன் வலம் வருவது நம் தமிழ்நாட்டின் சாபக்கேடு. மதுவால் ஏற்படும் உயிர் பலிகள், உடல் நோய்கள், குடும்பப் பிரச்சனைகள், சாலை விபத்துகள் என அனைத்தும் நாட்டிற்கும், தனிமனிதனுக்கும் தீமையே.

மதுவால் மதிகெட்டுப் போனோ ரெல்லாம் அதன் தீமைகளை அறிவர் அறிந்தும் விடுபடாது அதனால் சிறைவைக்கப் பட்டு அடிமைகளாக வாழும் கொடுமை நம் கண் முன் நடக்கிறது. நாடும் நாமும் வெட்கப்பட வேண்டிய கொடுமை இது !    

ஊழல் : இன்று இந்த வார்த்தை தெரியாத மனிதர்களே கிடையாது நம் நாட்டில், புதிய புதிய ஊழல்கள் நாள்தோறும் செய்திகளில் வலம் வருகின்றன; அமைச்சர்கள் முதல் அரசு அதிகாரிகள் வரை பெரியதும் , சிறியதுமாக தங்களால் முடிந்தவரை தவறுகளைச் செய்கின்றனர். இதுவரை நம் நாட்டில் நம்மவர்கள் கொள்ளையடித்த பணத்தை ஒழுங்காகப் பயன்படுத்தியிருந்தால் நம் நாட்டின் வறுமையையே ஒழித்திருக்கலாம் !

அரசாங்கம் அமைச்சர்களுக்கு பணம், வாகனம், அதிகாரம் முதலியன கொடுத்ததும் ஏன் இந்த ஊழல் ? அவர்கள் ஏன் கொள்ளையடிக்க வேண்டும் ? அரசியல் என்பதே சதுரங்கம் போன்றது, ஒரு முறை ஒரு காய் வெட்டப்பட்டால் அது உள்ளே வர, ஏதேனும் ஒரு சிப்பாய் கரையேறினால் தான் உண்டு. அதே நிலைதான் நம் அரசியல் வாதிகளுக்கும், ஒரு முறை ஒரு தொகுதியில் தோற்றுப் போனால் பின் அத்தொகுதியில் வெற்றிபெறுவது சாதாரண காரியமல்ல, ஏன் தன் கட்சியிலே அத்தொகுதி வேறு வேட்பாளருக்குப் போய்விடும் சாத்தியமும் உண்டு. எனவே இருக்கும் வரை நான்தான் ராஜா ! என்று முடிந்தவரை, முடியும்வரை கொள்ளையடிகின்றனர், மக்களை மறந்து உறவினர்களை விரும்புகின்றனர். தன் குடும்பம், உறவினர், தன் ஆதரவாளர் என பணம் பாதை மாறுகிறது, பின்னே இவர்கள் தானே தேர்தல் நேரங்களில் உழைப்பவர்கள் !. அதிகாரத்தில் இருக்கும் பொழுதே பணம், வீடு, தோட்டம் என வாங்கி குவித்து விட்டால் பின் தோற்றாலும் கவலையில்லை வசதியான வாழ்க்கையே தொடரும்.  

வீட்டில் இருக்கும் பணம் வீட்டை நடத்த ; வெளிநாடுகளில் இருக்கும் சொத்துகள் பின் வரும் தேர்தல்களில் செலவு செய்ய, இன்று அதையும் தாண்டி பல அரசியல் பிரமுகர்கள் பல கல்லூரிகளை நடத்துகின்றனர். பொறியியல், மருத்துவம், தொழிற்கல்வி என எந்தத் துறையையும் விடாமல், துறை வாரியாகக் கல்லூரிகளை கட்டி வற்றாத செல்வமான கல்வியை பணம் கொழிக்கும் மரமாக மாற்றி ‘கல்வித் தந்தைகளாக’ வலம் வருகின்றனர். பெரிய ஊழல்கள் மட்டுமே நமக்குத் தெரிய நாளிதல்களிலும், தொலைகாட்சிகளிலும் அவை பிரபலப் படுத்தப்படும். ஆனால் சிறு சிறு ஊழல்கள் கொள்ளைகள் நம் நாடு முழுவதும் தினமும் மறைவாக சில சுதந்திரமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இவை அனைத்தும் சிலரின் ‘சுகமான ஆடம்பர’ வாழ்க்கைக்காகத்தான், மக்களின் வாக்குகள் விலை மதிப்பில்லாதவை அவை வீணாக்கப் படக் கூடாது, இனிவரும் காலங்களிலாவது அரசியல் தலைவர்கள் கடமை மறவாது பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். ஊழல் நம் நாட்டை விட்டு நீங்க வேண்டும்.                           

Monday, 16 November 2015

தலைமைப்பண்பு : தன்னம்பிக்கை தந்த பரிசு – அ.பரிவழகன் - Self Confidence & Leadership

நம்பிக்கை என்பது ஒன்றின் மீது முழுமையாகப் பற்றுக் கொள்வது, ஒன்றை மட்டுமே முழுமையாக நம்புவது. கடவுளின் மீது உள்ள உண்மையான பற்று கடவுள் நம்பிக்கையை உண்டாகும், நல்ல நம்பிக்கைகள், நல்ல சிந்தனைகளை உருவாக்கும் அது நல்ல செயல்களுக்கும், ஆக்கப்பூர்வமான முடிவுகளுக்கும் வழிவகுக்கும். உண்மையான பற்று உறுதியைத் தரும், அதுவே தீய எண்ணங்களை உடைத்தெறிய உதவும்.

தலைமை சரியாக இயங்குமேயானால் அதன் கீழ் உள்ள நிலைகளில் பணிகள் சரியாக நடைபெறும், தலைமை என்பது தனக்கு கீழ் இருப்பவர்களை வேலைவாங்கும் பணியல்ல, சரியான வேலையை சரியான நபருக்குக் கொடுத்து அவர்களுக்கு ஊக்கமளித்து தட்டிக்கொடுக்கும் பணி. “எதை எவர் செய்தால் இச்செயல் இனிதே வெற்றிபெறும்” என்பதை அறிந்து அவர்களுக்கு சரியான பணியை அளித்தால் வேண்டும்.

தன்னோடு பணியாற்றுபவர்களை இத்தலைமை சரியான பாதைக்கு, வெற்றியை நோக்கி, அழைத்துச் செல்ல வேண்டும். தலைமையின் செயல்களை அனைவரும் நம்பும் வகையில், அதன் உத்தரவுகளை அனைவரும் மதிக்கும் வகையில் ஒளிவு மறைவின்றி அதன் செயல்பாடுகள் மனநிறைவையும், நம்பிக்கையையும், வெளிப்படுத்த வேண்டும்.

ஒரு சரியான தலைமை அனைவரின் செயல்பாடுகளையும் திறம்பட கவனித்தல் வேண்டும், அதன் முடிவுகள் தெளிவாக அனைவருக்கும் ஏற்றதாக, ஒருதலை பட்சமாக இல்லாமல், இருத்தல் அவசியம். ஒரு நல்ல தலைமை தன் நிறுவனத்தின் வெற்றி, நலன் பற்றி சிந்திப்பதாக இருத்தல் வேண்டும், அனைத்து முக்கிய ஊழியர்களிடமும் ஆலோசனைகளைப் பெற்று முடிவுகளை எடுக்கும் பாங்கு தலைமையின் மீது நல்ல மதிப்பை ஏற்படுத்தும்.

“ஒரு நல்ல தலைமையால் சாதாரண மனிதர்களைக்கூடத் திறைமை சாலிகளாக மாற்ற முடியும்”   

தலைமையின் வெற்றியை நோக்கிய பயணத்தில் தோல்விகள் ஏற்படும் பொழுது அதைச் சீரமைத்து மீண்டும் முன்னேற ஆற்றல் மிகுந்த மனிதர்கள் தலைமைக்கு உறுதுணையாக இருத்தல் வேண்டும். ஒரு புத்திசாலியான தலைமை என்றும் ஆற்றல் மிக்க மனிதர்களை தன்னோடு இணைத்துக் கொள்ளும், தலைமைக்குத் தன் நிறுவனத்தின் அனைத்துத் துறைகளைப் பற்றிய ஞானம் அவசியம். அனைத்துத் துறைகளைப் பற்றிய அறிவு உள்ளவரால் மட்டுமே சிறந்த தலைவராக விளங்க முடியும்.

“நல்ல தலைவர்கள் சூழ்நிலையால் உருவாக்கப்படுகிறார்கள், வெற்றியோ தோல்வியோ அது தலைமையைப் பொறுத்தே அமையும்”

தலைமை என்பது தன்நிகரற்று விளங்க வேண்டுமாயின் அது தனித் தன்மையுடன் செயலாற்ற வேண்டும், ஒரு தலைமையின் செயல்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் விரைவாகவும், விவேகமாகவும் இருத்தல் வேண்டும் ஆனால் அதன் சிந்தனைகள் விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்ததாக இருத்தல் வேண்டும்.

ஒரு நல்ல தலைமை அனைவரின் உழைப்பிற்கும் தலைவணங்கி, ஊக்குவித்து, அனைவரோடும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். தலைமையின் கட்டமைப்பு கட்டுக்கோப்பானதாக சரிசமமான அதிகாரப் பகிர்வுடன் இருத்தல் வேண்டும்.

ஒரு சிறப்பான தலைமையால் மட்டுமே நல்ல நிர்வாகத்தைக் கொடுக்க முடியும் அது வீடாக இருந்தாலும் சரி நாடாக இருந்தாலும் சரி. தலைமையே தாரக மந்திரம் ! 
துன்பம் வரும்போதும் துவண்டுவிடாத நம்பிக்கை
இன்னல் வரும்போதும் இடிந்துவிடாத நம்பிக்கை
துயர் வரும்போதும் துணிச்சலான நம்பிக்கை நமக்கு வேண்டும்

Saturday, 14 November 2015

நம் நாடு : தள்ளாடும் தலைமுறை – அ.பரிவழகன்


இன்றைய இளைய சமுதாயம் ஓர் புதிய பாதையில் சென்று கொண்டிருக்கிறது அது ஒன்றும் புதிய முயற்சியோ, சாதனையோ அல்ல, நம்மை நாமே அழிக்கும் செயல், இன்று நம் நாட்டில் நடக்கும் பெரும்பாலான பார்டிகளில், விருந்துகளில் மதுபானங்களின் புழக்கம் அதிகமாகிவிட்டது, மக்கள் அவற்றை சாதாரணமாகப் பயன்படுத்தும் அவல நிலை, எங்கே செல்கிறோம் நாம் ?. குளிர்பானங்களைப் போல குவிகின்றன மதுபானங்கள், ஆங்கிலேய ஆட்சியில் கள்ளுக்கடை மறியல்கள் நடந்த நாட்டில் இன்று மதுக்கடைகளுக்கு மாலை மரியாதை பாதுகாப்பு என பல அங்கீகாரங்கள்.

இன்றைய தலைமுறை மாணவர்கள் மிகவும் திறமைசாலிகள், ஆனால் அவர்களின் வாழ்க்கை “தீயின் நடுவே பஞ்சு” போல பரிதாபமாக உள்ளது. நல்லதைச் சொல்ல வேண்டிய சமுதாயம் கெட்டதை மட்டுமே அதிகம் சொல்கிறது, இன்று நம் மாணவர்கள் மீடியாவின் வாசத்தில் வளர்கின்றனர், வீடியோ கேமையே விதியென நம்பி நேரத்தை வீணடிக்கின்றனர். மாணவர்களின் மூளை குறுக்கு வழியில்  பணம், எளிதில் புகழ், பிடிவாதம், மது எனக் குழம்பிபோய் இருக்க யார் காரணம் ?

எளிதில் பணம் சம்பாதிக்க வழிகள் ஆயிரம் என்று சொல்பவர்கள் உழைத்துச் சம்பாதிக்கச் சொல்லாமல் தவறு செய்யாவே தூண்டுகின்றனர், அடுத்தவரின் “உணவைப் பறிக்கவே” நம் இன்று முயல்கிறோமா ? என்ற எண்ணமும் எழுகிறது. நம் கல்வி முறையிலோ சுயநலம் தலைவிரித்து ஆடுகிறது, அடுத்தவனுக்கு இடமளிக்கதே ! என்பதே தாரக மந்திரம். கல்வியில் போட்டி இருக்கலாம்; கல்வி போர்களமாக இருக்ககூடாது. தன்னம்பிக்கை, பொதுநலம், அன்பு இவற்றை வளர்க்காமல் பணம் என்ற குதிரையின் மீது கல்வி சவாரி செய்ய யார் காரணம் ?

இன்று நம் நாட்டில் விவாகரத்துகள் அதிகமாகிவிட்டன காரணம் சகிப்பின்மை, ஈகோ, பணம். “நீ யார் ? என்னை கேள்வி கேட்க !” நானும் உன்னைப் போலவே அதிகமாகப் பணம் சம்பாதிக்கிறேன் என ஆண்-பெண் இருபாலரும் போடும் வீண் சண்டைகள் முடிவது வழக்குமன்றத்தில். பணம் நம் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த மட்டுமேயன்றி நம் அடிப்படை வாழ்க்கையையே சீரழிக்க அல்ல.

“டிஸ்கோவில்” தொடங்கி “லிவிங் டு கெதரில்” தொடர்ந்து முடிவது “டிவோர்சில்” பிடித்தவரை வாழ்வோம் இல்லை என்றால் “குட்பை” இதுவே இன்றைய நவீன கலாச்சாரம். சாதாரண பிரச்சனைகளுக்கும் , சிறிய சண்டைகளுக்கும் கூட தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை இன்று அதிகம் இப்படி தன்னம்பிக்கை இல்லாத சமூகத்தைத்தான் இன்று நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா ?.

இவற்றைத் தீர்க்க என்ன வழி ? ஒரே வழி பண்பான கல்வி !

நல்ல பண்பை வளர்க்கும் நீதி போதனைகள் பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும், நம் கல்வி அன்பையும், பண்பையும் வளர்க்கும் விதமாகவும், சமுதாய நலன்களில் அக்கறை கொண்டதாகவும் இருக்க வேண்டும். கல்வியை மாற்றாமல் சமூக மாற்றம் சாத்தியமில்லை. எனவே இனிவரும் காலங்களின் நம் தவறுகளை சரி செய்து சமூக முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் உயர்ந்த மனிதர்களாக இருக்க வேண்டியது நம் ஓவ்வொருவரின் கடமை. இதுவே நம் நாட்டிற்கு நாம் செய்யும் சிறப்பான சேவை. 

Monday, 9 November 2015

"தீபாவளி" அரசியல் - அ.பரிவழகன் – Deepavali Politics


தமிழ்நாட்டில் தீபாவளி வரும் மாதத்தில் மக்கள் உற்சாகமாக தீபாவளி கொண்டாட்டத்திற்குத் தயாராகி விடுவர், அதே சமயம் சில அமைப்புகள், சில கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தீபாவளிப் பண்டிகையை விமர்சித்தும், கேலிபேசியும், தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துவர். ஆனால் மக்கள் இவர்களின் பேச்சையெல்லாம் கேட்பதில்லை, ஆண்டுக்கு ஆண்டு தீபாவளி மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

"நன்மை ஓங்கி தீமை அழியும்" செய்தியை உலகுக்கு உணர்த்தும் நன் நாளாக, ''எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் ஓங்குகிறதோ, அப்பொழுதெல்லாம் அதர்மத்தை அழித்துத் தர்மத்தைக் காக்க நான் அவதரிப்பேன்" என்று ஸ்ரீ மத் பகவத் கீதையில், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறியதற்கு ஏற்ப, ஸ்ரீ கிருஷ்ணர் அதர்மத்தை அழித்த நன் நாளாம் தீபாவளித் திருநாள்.

நரகாசுரன் என்ற கொடியவனை ஸ்ரீ கிருஷ்ணர் வதம் செய்து அழித்த நன் நாளே தீபாவளி, ஆகா அடிப்படையே தீமையை அழித்து நன்மையை நிலை நிறுத்தும் திருவிழா. நம் கலாச்சாரத்தின் அடிப்படையே தர்மம் தழைக்க வேண்டும் என்பதே அதை ஆண்டுதோறும் நமக்கு நினைவுப் படுத்தி நல்வழிப் படுத்தும் திருவிழா தீபாவளி. இப்படி நம் தர்மத்தின் அடி நாதமாக விளங்கும் ஓர் விழாவை வேண்டுமென்றே சிலர் முற்போக்கு என்ற போலி முக மூடியை அணிந்து கொண்டு விமர்சனம் செய்வது வாடிக்கையாகி வருகிறது.

தீபாவளியன்று பட்டாசு வெடிக்கக்கூடாது என்பவர்கள் தங்களின் சொந்த விழாக்களில், தங்கள் வீட்டின் நிகழ்ச்சிகளில், தாங்கள் சார்ந்த அமைப்புகளின், கட்சிகளின், சங்கங்களின் விழாக்களில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது ஏன் ? தங்களின் திருமண நிகழ்ச்சிகளில் ஆரம்பித்து கட்சி நிகழ்ச்சி வரை அனைத்திலும் பட்டாசு வெடித்துக் கொண்டாடும் 'முற்போக்குகள்' தீபாவளிக்கு நாம் பட்டாசு வெடித்தால் உடனே சமூக அக்கறையோடு பேசுவது விசித்திரமானது. தீபாவளியன்று " புகை புகை " என்று கூச்சலிடும் இவர்கள் நாளை முதல் இவர்கள் பயன்படுத்தும் புகையைக்கக்கும் வாகனங்களை விடுத்து நடந்து செல்வார்களா? தாங்கள் கட்சித் தலைவரின் பிறந்த நாளுக்குப் பட்டாசு வெடிக்க மாட்டார்களா ?     

உலகம் முழுவதும் பரவி வாழும் இந்து தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் விழாவான தீபாவளியை "இந்து தர்மத்தின்" விழா என்ற ஒரே காரணத்திற்காகவும், இந்துக்கள் ஆண்டுக்கு ஆண்டு இதை விமர்சையாகக் கொண்டாடுகின்றனர் என்பதற்காகவும், இந்து தர்மக் கடவுள்களை விமர்சனம் செய்ய வேண்டும்  என்ற நோக்கத்தோடு தீபாவளிப் பண்டிகையைச் சிலர் திட்டமிட்டுக் கேலி செய்கின்றனர்.

நம்முடைய இந்து தர்மத்தில் விழாக்களுக்குப் பஞ்சமில்லை. கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, சிவராத்திரி, நவராத்திரி, சபரிமலை விரதம், பொங்கல் விழா, தீபாவளி, அம்மன் விரதம், கார்த்திகை, மார்கழிமாத விழாக்கள், அமாவசை விரதம், பௌர்ணமி விழா (இவை சில மட்டும்) என எத்தனையோ விழாக்களை நாம் பல ஆண்டு காலமாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம்.     

இவ்விழாக்களுக்கெல்லாம் முதன்மையாக விளங்குவது தீபாவளி. நம் முன்னோர்கள் இத்தகைய பண்டிகைகளின், விழாக்களின் மூலம் நம் மக்களிடம் அன்பையும், சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும், வளர்த்தனர். ஊருக்கு ஊர் "ஊர் கூடித் தேரிழுத்து" சாதி வேற்றுமை ஒழிய வழி வகுத்தனர். லோகமான்ய பாலா கங்காதர திலகரின் முயற்சியால் ஆங்கிலேய கொள்ளையர்களை எதிர்க்க நம் பாரத மக்களை ஒன்றிணைக்க உருவாக்கப்பட்டதே விநாயகர் சதுர்த்தி "விநாயகர் ஊர்வல" நிகழ்ச்சி. அன்று முதல் இன்று வரை விநாயகர் ஊர்வலம் நம் மண்ணில் சிறப்பாக நடைபெறுகிறது.

உலவுத் தொழிலுக்கு நன்றி சொல்ல - பொங்கல்
நாம் செய்யும் தொழிலுக்கு நன்றி சொல்ல - ஆய்த பூஜை
கல்விக்கு நன்றி சொல்ல - சரஸ்வதி பூஜை
என ஒவ்வொரு விழாவிலும், ஓர் உட்ப் பொருளை மறைத்து வைத்தனர் நம் முன்னோர்.

நம் கலாச்சாரமே விழாக்கள் நிறைந்தது தான், ஒவ்வொரு மாதத்திலும் ஏதேனும் ஓர் பண்டிகை இருக்கும். பண்டிகைகளின் நோக்கமே மக்களை நல்ல ஆரோக்கியமான மனநிலையில் வைத்திருக்கத்தான், தேவையற்ற சிந்தனைகளில் இருந்து விலகி ஆரோக்கியமாக ஆன்மிகத்திலும் குடும்ப நலனிலும் ஈடுபடும் நோக்கத்துடனையே நம் மண்ணில் விழாக்கள் உருவாகின.  நம் மண்ணின் மரபு சார்ந்த அனைத்து விழாக்களையும் நாம் கொண்டாடி மகிழ்வோமாக.


அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் ...