Sunday, 1 January 2017

ஜல்லிக்கட்டு தமிழரின் அடையாளம், பாரதத்தின் பெருமை – அ.பரிவழகன் - Jallikattu Tradition of India

அனைவருக்கும் ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் , புத்தாண்டு பலருக்குப் பல கனவுகளோடு விடிந்திருக்கிறது, ஆனால் இம் மண்ணில் மாடுகளோடு திரியும் பூர்வகுடிகளுக்கோ ஜல்லிக்கட்டுக் கனவுடன் விடிகிறது.  எங்கிருந்தோ யார் யாரோ வருகின்றனர் நமக்குக் கட்டளையிடுகின்றனர் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாதென்று. பாவம் கோழைகளுக்கும் , கோமாளிகளுக்கும் எப்படித் தெரியும் வீர விளையாட்டின் அருமை பெருமை.

ஜல்லிக்கட்டு நம்முடைய பாரம்பரியம் மட்டுமல்ல, இம் மண்ணின் பாதுகாப்பு அரண் !. இம் மண்ணில்  வேளாண்மையும், விவசாயமும் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் நாட்டுப் பசுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டுப் பசுக்களின் இனவிருத்திக்கு ஆரோக்கியமான, வீரியமிகுந்த காளைமாடுகள் அவசியம். அப்படிப்பட்ட வீரியம் மிகுந்த தரமான காளைமாடுகளைத் தான் நாம் ஜல்லிகட்டுக்குப் பயன் படுத்துகிறோம். ஜல்லிகட்டுத் தடைபடும் பட்சத்தில் தரமான காளை மாடுகளை நாம் இழக்க நேரிடும். காளைமாடுகள் முறையாகப் பராமரிக்கப் படாமல் அவை அடிமாடுகளாகி அழிய நேரிடும். நாட்டுப் பசுக்களின் இனவிருத்திக்குச் சத்தான காளைகள் கிடைக்காது, ஆக தரமான மாடுகள் உற்பத்தியாகாது. இதன் விளையு நமக்கும், நம் வருங்கால தலைமுறைக்கும் தூய்மையான, ஆரோகியமான பால் கிடைக்காது, விளைவு ஊட்டசத்துக் குறைபாடு, நோய் !

எங்கிருந்தோ வந்த அந்நிய சக்தியான peta நம் பாரம்பரியத்தின் பெருமையை, கலாச்சார விழுமியத்தை தடை செய்யத் துடிப்பது ஏன் ? நம் நாட்டில் எத்தனையோ ஜீவராசிகள் உணவிற்காக, இறைச்சிக்காக வதைக்கப்பாடுகின்றன அதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் மிருக வதைக்கு எதிரானவர்கள் என்று கூறுபவர்கள் ஜல்லிக்கட்டை மட்டும் ஏதிர்ப்பது ஏன் ? நம் நாட்டில் வீரியம் மிகுந்த காளை மாடுகளின் இருப்பைத் தடுக்க நினைக்கும் முயற்சி இது, பசுவை தெய்வமாக மதிக்கும் நாடிது, குழலூதும் கண்ணனை நினைக்கும் பொழுதே அவனின் அழகிய பசுவும் நம் நெஞ்சை வருடும், நம்மை விடப் பசுவையும், களையையும் நேசிக்கும் ஓர் பண்பட்ட உயர்குடிச் சமூகம் வரலாற்றில் இல்லை. நாட்டுப் பசுக்களை அழிக்க நினைக்கும் அந்நிய சூழ்ச்சியின் திட்டமிட்ட சதி இது. ஜல்லிக்கட்டு தமிழரின் அடையாளம், பாரதத்தின் பெருமை. மண்ணையும், பாரம்பரியத்தையும், காக்க ஓங்கி ஒலிக்கட்டும் நம் குரல். ஜல்லிக்கட்டு இம்முறை நடத்தப்பட வேண்டும், எதிரிகளின் சூழ்ச்சி வலைகளில் இருந்து சீறிப்பாயட்டும் நம் காளைகள் ! சீறிப்பாயட்டும் நம் வரலாற்றின் வீர விளையாட்டு.
                                    Click Video Link 


No comments:

Post a Comment