மிகவும் குறைவான ஆட்களைக் கொண்டு, மிகவும் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட
ஜல்லிக்கட்டிற்கான மாணவர், இளைஞர் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது
ஒரு வரலாற்றுச் சாதனை. லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் சென்னை மெரீனாக்
கடற்கரையில் குழுமியது, தமிழகம் முழுவதும் மாணவர்கள் எழுச்சி கொண்டது, தமிழர்கள்
வாழும் நாடுகளில் தமிழ் மொழி பேசும் மக்கள் ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு
ஆதரவு கரம் நீட்டியது, என வளர்ந்தது போராட்டம். நடுங்கியது தமிழக அரசு மட்டுமல்ல,
டில்லியும் தான் ! இப்படி புகழ் மிக்கப் பக்கங்களைக் கொண்டிருந்தாலும், அதன் அரசியல்
சாயம் என்றோ வெளுத்துவிட்டது. தன்நெழுச்சியான மாணவர் போராட்டம், அமைதி வழிப்
போராட்டம் என்று தொடங்கினாலும் அதனை வளர்த்துக் காத்தது இயக்கங்கள் சார்த்த அரசியல்
தத்துவங்களே.
திராவிட சிந்தனை, பெரியாரிய சிந்தனை, கம்யூனிஸ சிந்தனை கொண்ட இயக்கங்கள்,
தேசிய நீரோட்டத்தை எதிர்க்கும் அமைப்புகள், தமிழ் தேசியம் பேசித் தனித் தமிழ்நாடு
கோரும் அமைப்புகள், தேசப்பிரிவினையை ஆதரிக்கும் அமைப்புகள், பகுத்தறிவு-முற்போக்குச்
சிந்தனை என்று கூறிக்கொள்ளும் அமைப்புகள், ஆகியோரின் சித்தாந்தப் பிரச்சாரக்
கூடமாக, செலவில்லா மாநாட்டுத் திடலாக , சொர்க்கபுரியாக, ஆட்டம், பாட்டம்,
கேளிக்கைகள், மீடியாக்களின் ஆதரவு, என நேர்த்தியாக, கவனமாக வடிவமைக்கப்
பட்டிருந்தது, மெரீனாக் கடற்கரைப்
போராட்டம். தொடங்கப்பட்டது என்னவோ ஜல்லிக்கட்டிற்காக, ஆனால் அதன் வளர்ப்பு,
செழிப்பு எல்லாம் இந்திய எதிர்ப்பு ! தனித் தமிழ்நாடு ! மோடி - பன்னீர்செல்வம்
ஒழிக !
ஆறு நாட்களில் (17-01-2017 முதல் 22-01-2017 வரை) முதல் இரண்டு
நாட்களைத் தவிர மீதம் இருந்த அனைத்து நாட்களும் தீவிரமான மோடி – பன்னீர்செல்வம் எதிர்ப்புதான்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஒ. பன்னீர்செல்வம், அ.தி.மு.க
பொதுச்செயலாளர் சசிகலா ஆகிய மூவரையும் மிகவும் அநாகரிகமான முறையில், ஆபாசமாக, தவறுதலாகச்
சித்தரித்து விமர்சனம் செய்வதுதான் பிரதானமாக இருந்தது. இந்தியா வேண்டாம் ! தனித் தமிழ்நாடு வேண்டும் ! இந்திய
தேசிய கொடி அவமதிப்பு என நீண்டது போரட்டத்தின் விஷக் கரங்கள். உண்மையாகவே
ஜல்லிக்கட்டிற்காக போராட வந்த மாணவர் கூட்டம் செய்வதறியாது திணறியது.
அப்பாவியாக “தமிழன்” என்ற ஒரு அடையாளத்தை மட்டும் சுமந்துகொண்டு ஜல்லிக்கட்டு வேண்டும் என்று கூடிய மாணவ-மாணவியர்களை,
நாட்டிற்கு எதிராக, மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக திருப்பியதுதான் “முற்போக்கு”
இயக்கங்கள் என்று சொல்பவர்கள் செய்த வேலை. உணர்சயின் விளிம்பில் இருக்கும் மாணவனை–மாணவியை
மேலும் தூண்டி விட்டு கைகளில் இந்திய எதிர்ப்பு வாசகங்களைக் கொடுத்து மோடியையும்,
பன்னீர்செல்வத்தையும் திட்ட வைத்தது, அப்பாவி இளைஞனுக்கு உணவு வழங்கி, மேடை
போட்டுக் கொடுத்து, அவனின் உணர்ச்சியை தூண்டிவிட்டு, மூளைச்சலவை செய்து, தாய்
நாட்டிற்கு எதிராக திருப்பி விட்டதுதான், பகுத்தறிவு
- கம்யூனிஸ கூட்டதின் சீரிய செயல்பாடு.
.
சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற உண்மை நோக்கத்திற்காக கூடிய கூட்டத்திற்கு
நாம் என்றும் தலை வணங்குகிறோம், நன்றியுணர்வோடு மதிக்கிறோம், அவர்களின் பலன்
கருதாத அர்ப்பணிப்பு, போராட்ட உணர்வு, நிலையான புரட்சி ஆகியவைதான் ஜல்லிக்கட்டிற்கான
தடையை நிரந்தரமாக நீக்கியது. மாணவர்களின், இளைஞர்களின் உண்மையான போராட்ட உணர்வை
தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளத் துடித்த இயக்கங்களின் மாயவலைகள்
ஏராளம். மோடி எதிர்ப்பு என்ற பெயரில் நாட்டை இகழ்வதும், நாட்டைத் துண்டாட
நினைப்பதும் முட்டாள்தனம்.
மாணவர் போரட்டத்தின் நோக்கங்கள் சரி என்றாலும் அதன் வழிமுறை, அது பயணித்த
விதம் தவறு. நாம் ஜல்லிக்கட்டிற்கு, மாணவர் எழுச்சிக்கு என்றுமே ஆதரவு என்றாலும்,
தவறான போராட்ட வழிமுறைக்குத் துணை போகக்கூடாது, தவறான போரட்டங்கள் நாட்டின்
பாதுகாப்பையே சிதைத்து விடும்.
வாழிய செந்தமிழ் ;
வாழ்க நற்றமிழர் ;
வாழிய பாரத மணித் திருநாடு !