Friday, 25 July 2014

தமிழ் அறிவியல் மொழியாக வேண்டும் ! அரசும், நாமும் என்ன செய்ய வேண்டும் ?

தமிழை அறிவியல் மொழியாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இன்று இருக்கிறோம், தமிழில் அறிவியல் சார்ந்தப் புத்தகங்கள் வராதவரை தமிழை நாம் வளர்ப்பது கடினம். பொறியியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உள்ள கருத்துகள், விளக்கங்கள், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும், இதன் மூலம் அந்தத் துறைகளைப் படிப்பவர்களிடம் அந்தத் துறை சார்ந்த புரிதல் அதிகமாக வளரும். ஆங்கிலத்தில் படிக்கும் பாடங்களை அதற்கு இணையாக தமிழில் படிக்கும் பொழுது இன்னும் கூடுதலாக, அதிகமாக அதில் உள்ள கருத்துகள் மனதில் பதியும். 

"யாரையும் நீங்கள் கட்டாயமாகத் தமிழில் தான் படிக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை " நாம் ஆகிலத்தில் படிக்கும் பொழுது ஒரு துணை நூல் போல, ஒரு Reference Book  போல தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட நூலைப் பயன்படுத்தலாம். “என்னுடைய ஒரே கருத்து தமிழில் மொழிமாற்றம் செய்தால் அவை நமக்கு எளிதாகப் புரியும், பொறியியலும், மருத்துவமும்  படிப்பதற்கு எளிதானதாக மாறும்”. உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆங்கிலவழிக் கல்விதான் சிறந்தது, எனினும் பாடங்களை எளிதில் கற்றுக்கொள்ள, புரிந்து கொள்ள தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டப் புத்தகங்கள் உதவும். இது அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும். 

இன்று பொறியியல் படிப்பவர்களில் பலர் தங்கள் பாடங்களைப் புரிந்து கொள்வதில் மிகவும் கஷ்டப்படுகின்றனர், இவர்களுக்கு தமிழில் மொழிமாற்றம் செயப்பட்டப் புத்தகங்கள் உதவும்.  பொறியியல் கல்லூரிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கிறது அதில் தவறில்லை அந்நிலை தான் தொடரவேண்டும், உலகத்தோடு தொடர்புகொள்ள இம்முறை தான் உதவும், அதே சமயம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பொறியியல் புத்தகங்களை மாணவர்கள் மத்தியில் கொடுத்து அவர்களைப் படிக்க வைத்து  அவர்களின் பாடங்கள்  எளிதில் புரியும் படி செய்தல் வேண்டும். 

ஒரு மாணவனை/மாணைவியை கல்லூரியில் படிக்கவைத்தல் மட்டுமல்ல, படிக்கும் மாணவனின் பாடங்கள் அவனுக்குப் புரியும் படி செய்தாலும் ஒரு அரசினுடைய, பல்கலைக்கழகத்தினுடைய கடமையாகிறது. 
இது நாம்முடைய கடமையும் கூட !

இந்த மாற்றம் தான் நாம் இன்று, நம் தமிழுக்குச் செய்ய வேண்டியது ! 

கவனத்தில் கொள்ளுமா அண்ணாப் பல்கலைக்கழகம் ?
கவனத்தில் கொள்ளுமா தமிழக அரசு ?   

No comments:

Post a Comment