Wednesday, 22 April 2015

"தாலி" பற்றிய சங்ககாலத் தமிழர் ஆதாரங்கள் ("Thirumangalyam-Thali" Tamil Sangam age Evidences)


             தாலி அகற்றல் புரட்சி அல்ல, சிந்தனை வறட்சி!
                        பத்மன் - தினமணி  - 16.04.2015


 தமிழர்தம் சங்க இலக்கியத்திலே திருமணச் சடங்குகளும் இருக்கின்றன, தாலியும் இருக்கிறது. ஊர் கூடித் திருமணம் நடத்தும் முறை ஏன் வந்தது என்பதற்கு பொய்யும் வழுவும் தோன்றிய பி்ன்னர் ஐயர் யாத்தனர் கரணம்  என்ப (கற்பியல்   - 143) என்ற தொல்காப்பியச் செய்யுள் விடை தருகிறது. 
விருப்பப்பட்ட ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கை முறையிலே தங்களுக்குள் எந்த பந்தமும் இல்லை என்று பொய் கூறி ஏமாற்றுவதும், தவறுகளும் மலிந்துவிட்ட காரணத்தால்தான், கரணம் எனப்படும் திருமண முறையை, சமூகத் தலைவர்கள் கொண்டுவந்தனர் என்பது இதன் பொருள். 
இந்தத் திருமணம் எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கும் தொல்காப்பியம் விளக்கம் தருகிறது.(கற்பியல் - 140) 
கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை
கொடைக்கு உரி மரபினர் கொடுப்ப, கொள்வதுவே. 
மணப்பெண்ணை ஏற்பதற்கு உரிய குடியைச் சேர்ந்த மணமகன், அப் பெண்ணைத் தனக்கு இல்லாளாகத் தருவதற்கு உரிய குடியைச் சேர்ந்தோர் கொடுக்க, ஏற்றுக்கொள்வதே திருமணம் என்கிறது தொல்காப்பியம். 
இவ்வாறாக தகுதியுடைய மணமகனுக்கு, தகுதி உடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணை மணமுடித்துத் தருகின்றனர். அந்தத் தகுதியை எவ்வாறு தேர்ந்தெடுத்தனர்? வீரமுடைய ஆண்மகனுக்கே முதலிடம். ஆகையால் புலியோடு போராடி அதனுடைய பல்லைப் பிடுங்கிக்கொண்டு வந்து, தன் வீரப் பரிசாக பெண்ணுக்குத் தாலியை அணிவித்தான் அக்காலத் தமிழன். பின்னர் உண்மையான புலிப் பல்லைக் கொண்டு வருவது அருகி, பொன்னால் ஆன புலிப்பல், தாலியில் இடம்பெற்றது. ஆகையால்தான், இக்காலத்திலும் தமிழர்களின் தாலியின்  கீழே இருபுறமும் புலிப் பல் போன்ற தோற்றத்துடன் அமையப் பெற்றுள்ளது. 
சங்க காலத்திலே சிறுவர்கள்தான் ஐம்படைத் தாலி அணிந்தார்கள், பெண்கள் தாலி அணிந்ததில்லை என்று கூறுவது திரிபுவாதம். தாலி என்றால் அணியப்படும் கயிறு என்று பொருள். அவ்வகைத் தாலி ஒன்றை அதாவது கயிற்றை, சிறுவர்கள் அணிந்தார்கள் என்பது உண்மையே. அதேபோன்று பெண்களும் மங்கல நாணாகிய கயிற்றை அணிந்திருக்கிறார்கள். 
தமிழ்ப் பெண்கள் தாலி அணிந்ததற்கு ஏது சங்க இலக்கிய ஆதாரம் என்பதற்கு கீழ்வரும் பாடல்கள் விடைதரும். 
அகநானூற்றில் கயமனார் இயற்றிய ஏழாம் பாடலின் வரி  பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி”  என்று அமைந்துள்ளது.  பாலைத் திணையில் அமைந்த இந்தப் பாடல், தலைவியைப் பார்த்து செவிலித் தாய் பாடியது. பருவப் பெண்ணின் உடல் மாற்றத்தைக் கூறும் அந்தப் பாடலில், தங்கத்தோடு புலிப்பல் கோத்த ஒளிவீசிய தாலியை தன் மகள் அணிந்திருப்பதாக செவிலித் தாய் பாடுகிறாள். 
அந்தத் தாலி, திருமணமான பெண்கள்  கழுத்தில் அணியும் தாலிதானா என்பதற்கு புறநானூற்றின் 127-ஆவது பாடல் சான்று தருகிறது. அப்பாடல், ஆய் என்னும் குறுநில மன்னனை வாழ்த்தி, புலவர் உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் பாடியது. 
ஆய் எனும் மன்னனின் கோயில் அதாவது அரண்மனையானது, யாழிசைத்த பாணர்களுக்கு அம்மன்னன் யானைகளைப் பரிசாகத் தந்து விட்டதால், வெறிச்சோடிக் கிடக்கும் யானை கட்டும் தறிகளில் காட்டு மயில்கள் அச்சமின்றி அமர்ந்திருக்கும் வகையிலும், ஆய் குலத்துப் பெண்கள் ஈகையாக கொடுக்க இயலாத மங்கலநாணாகிய தாலி அன்றி வேறு எந்த அணிகலனும் அணியாத நிலையிலும் பொலிவிழந்து காணப்பட்டாலும், மற்ற மன்னர்களின் அரண்மனையைவிட அதுவே உயர்ந்தது என்கிறார் புலவர். ஏனெனில் ஆயின் கொடைத்தன்மை அத்தகையது. அப்படிப்பட ஆய் மன்னனின் வீட்டுப் பெண்களிடம், மற்ற நகைகள் தங்காமல்போயினும், தங்கத்தாலான தாலி மட்டுமே மிஞ்சியிருக்கிறது.  ஏனெனில், கொடை வள்ளல் ஆய் மன்னனாலேயே கொடையாக அளிக்கப்பட முடியாத புனிதம் வாய்ந்தது அந்தத் தாலி என்பதுதானே இதன் பொருள். 
இதோ அந்தப் பாடல் வரிகள்:
          களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
     பாடின் பனுவற் பாண ருய்த்தெனக்
     களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்
     கான மஞ்ஞை கணனொடு சேப்ப
     ஈகை யரிய விழையணி மகளிரொடு
     சாயின் றென்ப வாஅய் கோயில் 
ஈகை அரிய இழையணி மகளிர் என்ற வரிகளை நோக்க வேண்டும். ஈகை அரிய இழை என்பது மங்கல நாணாகிய தாலியைத் தவிர வேறு என்ன? 
(அது இருக்கட்டும், முதலில் தாலி என்ன அடிமைச் சின்னமாஇல்லையில்லை. தமிழர்களின் வீரம் சார்ந்த கலாசாரத்தின் அடையாளம். வீரத்தைக் காட்ட முதலில் உண்மையான புலிப்பல்லைக் கோத்த தாலி அணிவித்த தமிழன், பிறகு புலிநகம் வைக்கும் இடத்திலே பொன்னை வைத்து, தனக்குப் பெண்ணை வைத்துக் காப்பாற்றும் பொருள் பலம் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினான்.) 
தாலி, ஆணுக்குப் பெண்ணை அடிமையாக்கும் சின்னம் அல்ல, பெண்ணுக்கு ஆண் தரும் காணிக்கை. அதைக் கழுத்தில் அணிவிப்பது, ஆணுக்குப் பெண் அடிமை என்பதைக் காட்டுவதற்கு அல்லவா என்று கேட்டால், விருதுகளையும், விளையாட்டுப் பதக்கங்களையும் தாலிபோல் மாலையாகக் கழுத்தில்தானே இப்போதும் அணிவிக்கிறார்கள்அது என்ன அவமானமா அல்லது கௌரவமா? பதக்கம் அணியப் பெறுபவர்கள் தலைவணங்கி ஏற்றுக்கொள்வது மரபு, இயல்பான செயலும்கூட. இதில் எங்கே வந்தது அடிமைத்தனமும் அவமானமும்? 
அதுபோல, தனது இல்லக் கிழத்தியை கௌரவிக்கும் வகையிலேயே அவளுக்குத் தாலியைக் கழுத்தில் அணிவித்தனர் நமது தமிழ் முன்னோர்கள். இது அவமானம் அல்ல, அடையாளம்.

Saturday, 11 April 2015

இந்து ஆலயங்களும் - அரசுகளும் (Hindu Temples and Governments)



செய்தி :  இந்து கோவில்களில் உள்ள தங்கத்தை வங்கிகள் மூலம் பெற்று, அதற்கு ஈடாக வட்டி அளிக்கும் புதிய திட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. தங்கம் இறக்குமதி செய்வதன் மூலம் செலவாகும் அன்னிய செலாவணியை வெகுவாகக் குறைக்கவும், கடத்தல் தங்கத்தை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

நம் சந்தேகங்கள் :

ஏற்கனவே கோவில் நிலங்களை அரசு முறையாக பராமரிப்பதில்லை, கோவிலையும் சுத்தமாக வைதிருப்பதில்லை, கோவிலுக்குத் தேவையான வசதிகளையும், பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளையும் முறையாகச் செய்து தருவதில்லை, இந்நிலையில் கோவில் தங்கத்தின் மீது இப்பொழுது அரசுக்கு இருக்கும் பார்வை சரியாக இருக்குமா,இயங்குமா ?   

பெரிய கோவில்கள் மட்டுமே சிறப்பாகப் பராமரிக்கப் படுகின்றன, சிறிய கோவில்கள் முதலில் பாதுகாப்பாகவே இல்லை, பராமரிப்பு பற்றி பிறகு பார்க்கலாம்.  

பா.ஜ.க அரசு கோவில்களின் நகைகளை எடுத்து, உருக்கி, வட்டி கொடுத்து,  சிறப்பாக பராமரிக்கின்றது என்று  வைத்துகொள்வோம், நாளை வேறு அரசியல் கொள்கையை கொண்ட அரசு ஆட்சிக்கு வந்தால் நகைகளை அவர்கள் "ஒழுக்கமாக" பாதுகாப்பார்கள், என்று உறுதி கூற முடியுமா  திராவிட கட்சிகளின் ஆட்சியில் நம் தமிழக கோவில்களின் நிலை என்ன ? கோவில் வருமானத்திலே இத்தனை ஊழல் "தங்கமே" கிடைத்து விட்டால் பிறகு என்ன "கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா" என்ற நிலை தான். 

மோடியரசு நகைகளை எடுத்துக் கொள்ளலாம் தவறில்லை ஆனால் நகைகளுக்கு யார் உத்தரவாதம் தருவது ? பா.ஜ.க - மோடியரசு கோவில் விசயத்தில் ஒழுக்கமாக செயல் படலாம், மற்ற மாநில அரசுகள், பா.ஜ.க வுக்குப் பிறகு வரும் அரசுகள் கோவில் விசயத்தில் ஒழுங்காகச் செயல் படுமா ?  

பக்தர்கள் கொடுக்கும் தங்கம் ஆட்சி நடத்த என்றால், அதை மற்ற மதங்களின் வழிபாட்டு தலங்களில் இருந்தும் பெற வேண்டும். முடியுமா உங்களால் ? அதுதானே மதச்சார்பின்மை ! 

ஒரு அரசும் இந்து கோவில்களின் பணத்தை எடுத்து இந்து மதத்தைப் பாதுகாக்க, இந்து தர்மத்தை போதிக்க எந்த முயற்சியும் செய்வதில்லை, மாறாக கோவிலில் இருந்து பணத்தை கொடு, நிலத்தை கொடு , தங்கத்தை கொடு என்று கேட்கின்றனர். 

எத்தனை இந்து கோவில்களின் இணையதளங்கள் செயல் பாட்டில் உள்ளன ?  எத்தனை மாநில அரசுகள் தங்கள் மாநில கோவில்களில் நடக்கும் நிகழ்சிகளை இணையத்தில் பதிவு செய்கின்றன ? 

கோவில்களில் முறையான கழிப்பிட வசதி இல்லை, குளத்தில் குளித்து விட்டு உடைமாற்ற பாதுகாப்பு அறை வசதி இல்லை. இதை எல்லாம் யார் செய்து தருவது ?   

அரசர்கள் அந்தக் காலத்தில் கோவில்களுக்கு நகைகளைக் கொடுத்தனர், ஆனால் இன்று அரசோ நகைகளை கேட்கிறது ! 

பாண்டியனும், சோழனும்,சேரனும் கட்டிய தமிழகக் கோவில்களின் இன்றைய நிலை என்ன ? இன்று அறநிலையத் துரையின் கீழ் இயங்கும் கோவில்களில் இருந்து பெறப்படும் பணம் கோவில்களுக்கு முழுமையாகச் செலவு செய்யப்படுகிறதா ? 

ஊழல் அரசியல் வாதிகளையும், ஊழல் அதிகாரிகளையும் நம்பி எப்படி கோவில் நகைகளை வங்கிகளில் வைப்பது ? சுடுகாட்டு கூரையில் ஊழல்; கார்கிலில் உயரிழந்தவர்களுக்கு கட்டிய வீடுகளில் ஊழல் என்று மக்களின் உணர்வு சம்மந்தப்பட்ட விசயங்களிலே ஊழல் செய்து ருசிகண்ட நம் மக்கள் தலைவர்கள் கோவில் நகைகளை சும்மா விடுவார்களா ? "பாய்சனையே பாயசமாக சாப்பிடும் நம்மவர்களிடம் பாயசமே கிடைத்தால் ? "   

நாட்டின் வளர்சிக்காக கோவில் தங்கத்தை எடுக்கலாம், உருக்கலாம், விற்கலாம் தவறில்லை, நான் அந்த அளவுக்குப்  பிற்போக்குவாதி அல்ல, ஆனால் அதே சமயம், சுதந்திரத்திற்குப் பிறகு இத்தனை ஆண்டுகளில் அரசுகள்  கோவில்களுக்குச் செய்தவை என்ன ?  

கோவிலில் இருந்து பணம் வரவில்லை, கோவிலுக்கு சொந்தமாக நிலம் இல்லை என்றால் எந்த அரசாங்கமாவது கோவிலை நடத்துமா ? 

"கோவில்கள் பணம் கொழிக்கும் இடம், முதலீடு இல்லாத வருமானம் தரும் இடம் என்பதற்காகவே அரசுகள் கோவில்களை நடத்துகின்றன" பணத்திற்காகவே அன்றி பக்திக்காக அல்ல !    

இந்த திட்டத்தில் அரசு வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும், நாடாளுமன்றத்தில் எந்த எந்த கோவில்களில் இருந்து எவ்வளவு நகைகள் பெறப்பட்டன, எவ்வளவு வட்டி கொடுக்கப்படுகின்றன என்பன போன்ற விஷயங்கள் பதிவு செயப்பட வேண்டும். 100 சதவீத வெளிப்படைதன்மை தேவை இல்லையேல் ஆண்டவன் சொத்து அம்போ !  

அரசு எடுக்கப்போவது ஆண்டவன் தங்கம் அல்ல; மக்களின் தங்கம் ! 
கோவில்கள் மக்களின் சொத்து ! அரசுகளின் வட்டிக்கடை அல்ல !  
-பரிவழகன்-