இக்காலத்தில் நம்மிடையே சில சீர்திருத்தக்காரர்கள் இருக்கிறார்கள். நமது சமயத்தை அவர்கள் சீர்திருத்த விரும்புகிறார்கள். அதாவது, ஹிந்து தேசத்தை மறுமலர்ச்சியடையச் செய்ய, நமது சமயத்தை தலைகீழாக மாற்ற விரும்புகிறார்கள். அவர்களிடையே சிந்திக்கக் கூடியவர்கள் சிலரும் இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் பெரும்பாலானவர் பிறரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறார்கள்.
என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் மிகவும் முட்டாள்தனமாக நடக்கிறார்கள். இந்த ரகச் சீர்திருத்தக்காரர்கள் நமது சமயத்தில் அந்நிய நாட்டுக் கருத்துக்களை நுழைக்க வெகு உற்சாகமாக இருக்கிறார்கள். அவர்கள் `உருவ வழிபாடு’ என்ற சொல்லைப் பிடித்துக் கொண்டு விட்டார்கள். “இந்து சமயம் நேர்மையானதல்ல. ஏனெனில் அது உருவ வழிபாடு நடத்துகிறது” என்று துணிந்து பேசுகிறார்கள்.
`உருவ வழிபாடு’ என்று அழைக்கப்படுவது எத்தகையது? அது நல்லதா, கெட்டதா என்று கண்டுபிடிக்க அவர்கள் ஒருபோதும் முனைவதில்லை. பிறரிடமிருந்து கருத்துக்களைக் கடன்வாங்கி, `இந்து சமயம் நேர்மையானதல்ல’ என்று கூச்சலிட்டுத் தாக்க அவர்களுக்குப் போதுமான துணிச்சல் இருக்கிறது.
உருவ வழிபாடு தவறு என்பது புளித்துப்போன பேச்சாகிவிட்டது. ஒவ்வொரு மனிதனும் சற்றும் நிதானித்துப் பார்க்காமல் அதனை உடனே ஒப்புக் கொண்டே வருகிறான். ஒரு சமயம் நானும் அவ்வாறு நினைத்திருந்தேன். அந்தக் குற்றத்துக்குத் தண்டனையாக, எல்லாவற்றையும் விக்கிரகங்கள் மூலம் அநுபவித்து உணர்ந்த ஒருவருடைய திருவடியின் கீழ் அமர்ந்து உபதேசத்தைப் பெற வேண்டியவனானேன். நான் குறிப்பிடுவது ராமகிருஷ்ண பரம ஹம்ஸரைப் பற்றியே.
உருவ வழிபாட்டால் அத்தகைய ராமகிருஷ்ண பரம ஹம்ஸர்கள் உண்டாக்கப்பட்டார்கள் என்றால் உங்களுக்கு எது வேண்டும்? சீர்திருத்த வாதியின் கொள்கைகளா? அல்லது ஏராளமான விக்கிரகங்களா? எனக்குப் பதில் அளிக்க வேண்டும். உருவ வழிபாட்டால் ராமகிருஷ்ண பரமஹம்ஸர்களை உண்டாக்க முடியுமானால் மேற்கொண்டு ஆயிரம் உருவங்களைக் கொண்டு போங்கள். இறைவனருளால் உங்களுக்கு வெற்றி கிட்டட்டும். எந்த வழிமுறை மூலமாவது அத்தகைய சீரிய இயல்பினரை உண்டாக்குங்கள்.
"அவர்கள் விரும்புவது மேலோட்டமான புரட்சி ; நான் விரும்புவது அடி முதல் முடி வரையிலான ஒட்டுமொத்தமான வளர்ச்சி !" இதுதான் விவேகானந்தர் ஸ்டைல் ; இதனால் தானே இவர் இன்றைய இளைய சமூகத்தின் ரோல் மாடல் ! மற்றவர்கள் நம் நாட்டைத் திட்டும் பொழுது ; என் நாடு புனிதமானது ; என் நாடு உலகின் குருவாக மாறும் என்றவர். இங்கு புரட்சியை விட வளர்ச்சியே தேவை என்றவர்.இந்தியாவின் ஆன்மீக வளங்களை உலகறியச் செய்தவர்.
நான் பெருமையோடு சொல்கிறேன் 'என் தலைவன் விவேகானந்தன் ' என்று.