ஒருபுறம் குளம். மறுபுறம் உயரமான சுவர். வாராணசியில் அவற்றின் இடையே சாலையில் நடந்துகொண்டிருந்தார் விவேகானந்தர். பின்னால் ஏதோ சப்தம். திரும்பிப் பார்த்தார். பத்துப் பதினைந்து குரங்குகள் அவரைத் துரத்தி வந்தன. இப்போது என்ன செய்வது?
குரங்குகளிடமிருந்து தப்பிப்பதற்காக வேகமாக ஓடத் தொடங்கினார். குரங்குகள் அவரை விடுவதாக இல்லை. அவையும் கன வேகமாக ஓடி அவரைத் துரத்தின. திடீரென்று ஒரு குரல் கேட்டது. முன்னே சென்ற ஒருவரின் குரல்தான் அது...
"குரங்குகளைக் கண்டு ஓடாதே, எதிர்த்து நில்; உறுதியாக அவற்றை நோக்கி முன்னேறு. பிறகு என்ன நடக்கிறது என்று பார்?''
விவேகானந்தர் அந்தக் குரல் சொன்னபடியே செய்தார். குரங்குகளின் பக்கம் திரும்பி எதிர்த்து நின்றார். குரங்குகள் திகைப்புடன் செயலிழந்து நின்றன. பின்னர் மெல்ல குரங்குகளை நோக்கி உறுதியோடு நடந்தார் விவேகானந்தர். அவை அவரைத் தொடரவில்லை. அச்சத்தோடு தயங்கி நின்றன. மெல்லப் பின்வாங்கின. பிறகு அவரைவிட்டு வேகமாக ஓடி மறைந்தன.
விவேகானந்தர் எழுதுகிறார்: "இளைஞனே, அந்தக் குரங்குகள் எல்லாம் உன் வாழ்க்கையில் வரும் சோதனைகளே; சோதனைகளைக் கண்டு அஞ்சி ஓடினால் அவை துரத்தும்.
தைரியமாக அவற்றை நேருக்குநேர் எதிர்கொண்டால் சோதனைகள் விலகி ஓடிவிடும். சோதனைகளைக் கண்டு அஞ்சாதே. சோதனைகளுக்கு அச்சம் ஏற்படும் வகையில் எதிர்த்து நின்று வெல்வாயாக!''
விவேகானந்தர் மூளை பலம் மட்டுமல்ல, உடல் வலிமையும் வேண்டும் என்கிறார்.'நாள்தோறும் கால்பந்து விளையாடு; கீதை உனக்கு இன்னும் நன்றாகப் புரியும்' என்று சொன்னவர் அல்லவா?
அவர் சொற்கள் மந்திர சக்தி நிறைந்தவை. ஒவ்வோர் இளைஞனும் நினைத்து நினைத்துத் தன்னைச் செதுக்கிக் கொள்ளப் பயன்படும் உளிகளாக அவரது வார்த்தைகள் உருக்கொள்கின்றன. இன்றைய இளைஞர்கள் பின்பற்றுவதற்காக விவேகானந்தரது பொன்னான கருத்துகள் காத்திருக்கின்றன.