Saturday 10 October 2015

சனாதன தர்மம் - 7 - இந்து தர்மம்: தமிழ் மொழியும் எளிய மனிதர்களும் – அ.பரிவழகன் – Hindu dharma : Tamil language and Common Man

எண்ணிலடங்காத வழிமுறைகளையும் புனித நூல்களையும் அதனைத் தொடர்ந்து எண்ணற்ற ரிஷிகளையும், குருமார்களையும் கொண்டது நம் சனாதன தர்மம். ஒவ்வொரு இறை வழிபாட்டிற்கும் ஒரு நூல், ஒவ்வொரு பழக்கவழக்கதிற்கும் ஒரு நூல், ஒவ்வொரு பாரம்பரியத்திற்கும் ஒரு நூல். இப்படி எல்லையற்ற வழிமுறைகளைக் கொண்ட நம் இந்து தர்மத்திற்கு வழிகாட்ட எல்லையற்ற தத்துவங்கள் அவற்றை விளக்க எண்ணிலடங்கா நூல்கள்.

“ஒரே ஒரு நூல், ஒரே ஒரு கடவுள்” என்ற வழிமுறை இங்கு கிடையாது, அதற்கு மாற்றாக “எண்ணிலடங்கா ஞானப் பொக்கிஷங்கள், எண்ணிலடங்கா கடவுளர்கள்” என்ற முறையே நம் வழிமுறை. இதுவே நம் கலாச்சாரத்திற்கு ஏற்ற முறை. “பிறருக்கு ஏற்றது, நமக்கு நஞ்சாகலாம்” என்கிறார் சுவாமி விவேகானந்தர், ஆகா பிற நாடுகளுக்கு ஏற்ற வழிபாட்டு முறை நமக்கு சரிவராது.

நம்முடைய தமிழ் மொழியில் நம் பாரத கலாச்சாரத்தின் ஹிந்து கடவுளர்களைப் போற்றி, புகழ்த்து பல ஞானப் பொக்கிஷங்கள் இருக்கின்றன. தமிழ் மொழியில் பக்தி இலக்கியங்களின் பங்கு மிகப் பெரியது, பக்தி இலக்கியங்களை விட்டு விட்டு தமிழ் மொழியைப் பார்த்தால் அது வெறும் எழும்புக்கூடு போல தான் இருக்கும், பக்தி இலக்கியங்கள் தான் நம் தமிழ் மொழிக்கு அழகையும், வசீகரத்தையும், ஞானத்தையும், பெருமையையும், கம்பீரத்தையும் தருகின்றன. முற்காலத்தில் நம் முனிவர்கள், அறிவுஜீவிகள் கடவுளைப் போற்றிப் பல பாடல்களை இலக்கிய வடிவில் இயற்றி நம் தமிழுக்கும் இறைவனுக்கும் ஒரு சேரத் தொண்டாற்றியுள்ளனர். பக்தி இலக்கியங்கள் நம் தமிழ் தாய்க்கு ஜீவன் போன்றது.

பன்னிரு திருமுறைகள் (தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பெரியபுராணம்), கம்பராமாயணம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, நாலாயிர திவ்யப்ரபந்தம் என இப்படியல் நீளும் (இவை சில மட்டுமே). திருக்குறள் நம் சனாதன தர்மத்தின் கலாச்சாரத்தில் தோன்றிய அறநூல், பிற்காலத்தில் அதை உலகப்பொதுமறை என்று அனைவரும் ஏற்றுக் கொண்டது நம் தமிழ் மொழிக்கும், நம் ஹிந்து கலாச்சாரத்திற்கும் பெருமையே !

நம் பாரத திருநாட்டில் இருக்கும் ஒவ்வொரு மொழியிலும் எண்ணற்ற நூல்கள் நம் கலாச்சரா கடவுளர்களைப் போற்றி பெருமளவில் இருகின்றன. நம் பரந்துபட்ட பாரதத் திருநாட்டில் இருக்கும் பல மொழிகளில் நம் ரிஷிகள், முனிவர்கள், அறிவுஜீவிகள், கல்வியாளர்கள், புலவர்கள், எனப் பலரும் தங்களுடைய அறிவாற்றலின் காரணமாக தெய்வத்தின் துணையோடு தங்களின் தாய் மொழியில் நம் சனாதன இந்து கடவுளர்களைப் புகழ்ந்து, போற்றி பல பாடல்களை, இலக்கியங்களைப் படைத்துள்ளனர்.

கிராம தேவதை வழிபாடு, கிராம தெய்வங்களின் வழிபாடு, கிராம கடவுளர்களைப் போற்றிப் புகழ்ந்து பாடிய நாடுப்புறப்பாடகள் நம் பாரதம் முழுவதும் மிகவும் பிரபலம். கிராமத்து மக்கள், எளிய மக்கள் தங்களின் விருப்பமான கடவுள்களைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் ஏராளம், அவை ஏட்டில் எழுதப்படவில்லை, வாய்மொழியாகவே பாடப்பட்டன, பரப்பப்பட்டன.

காளியம்மன், மாரியம்மன், முத்துமாரி அம்மன், பவானி அம்மன், சீலக்காரி அம்மன், இராணி அம்மன், அய்யனார் சாமி, இருளப்பன் சாமி, கருப்ப சாமி, சுடலை மாட சாமி, மதுரை வீரன் சாமி, முனீஸ்வரன் சாமி, என இப்படியல் நீளும் (இவை சில மட்டுமே). இக்கடவுளர்களைப் பற்றி பாடப்பட்ட பாடல்கள் பெரும்பாலும் வாய்மொழி நாட்டுப்புறப் பாடல்களே, இவை நம் கிராமத்து எளிய மக்களை நம் கலாச்சாரத்தின் மீதும், நம் தர்மத்தின் மீதும் மிகுந்த ஈடுபாட்டோடும், பற்றுதலோடும், பக்தியோடும் இருக்க வைத்திருகின்றன . எளிய மக்களின், எளிய பாடல்கள் அவர்களின் தூய்மையான அன்பு இன்றும் தொடர்ந்து ஆண்டவனை அன்பால் மகிழ்விக்கின்றன. [உதாரணம்: நாடகத் தமிழ் உலகின் இமயமலை எனப்பாரடப்படும், பாமரர்களின் பழங்கதைகளை நாடகமாக்கிய “சங்கரதாசு சுவாமிகள்” (1867-1920), சில நாடகங்கள்: வள்ளி திருமணம், பக்தப் பிரகலாதா, இலவகுசா ]

நம் பாரதத்தின் ஒவ்வொரு மூலையிலும், மொழியிலும், எளிய மனிதர்களின் உணர்வுப்பூர்வமான பாடல்கள் பரந்து விரிந்து காணக் கிடைகின்றன. இம்மண்ணோடு மண்ணாக அவர்களின் பாடல்கள் கலந்து, இம் மண்ணுக்கு வலிமையைத் தருகின்றன. எளிய மனிதர்களின் வலிமையான தொண்டுதான் இன்றும் நம் இந்து தர்மத்தைக் காக்கின்றது. போற்றுவோம் அவர்களின் தொண்டினை !


நம்முடைய கலாச்சாரத்தின் காவலர்கள் நம் மன்னர்கள், ரிஷிகள் மட்டும் அல்ல, நம்முடைய குடும்பங்களும் அதில் வாழ்த்த எளிய மனிதர்களும் தான், அவர்கள் பல அறிய பெரிய சேவைகளை பெயர் கூறாது திறம்பட செய்துள்ளனர். அவர்களுக்கு என்றென்றும் நம் வணக்கங்கள், நன்றிகள் ! என்றும் உங்கள் வழியில் நாங்கள்.

1 comment: